உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 15) உயிரிழந்தார்.
அவரது உடலானது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திர்ன உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் மறைவால் துயரம் அடைந்தேன். அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காள ஆளுநராகவும் பணியாற்றினார். தனது நீண்ட பொது வாழ்வில், மக்களின் நலனுக்காக பாடுபட்டார். தமிழகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
நாகாலாந்து மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடிய இல. கணேசன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு; மணிப்பூர் மாநில ஆளுநர், மேற்கு வங்காள ஆளுநர் (கூடுதல்), மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
இல. கணேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், நாகாலாந்து மாநில ஆளுநரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான இல. கணேசன் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
அன்புச் சகோதரர் கணேசன்தான் கொண்ட கொள்கையின் இறுதி வரை உறுதியாக இருந்தவர். அனைவரிடத்திலும் அன்புடன் பழகக் கூடியவர். மிகச் சிறந்த பண்பாளர். இவரது இழப்பு தமிழ் இலக்கியவாதிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் பேரிழப்பு. நாடு ஒரு சிறந்த தேசியவாதியை இழந்துவிட்டது.
இல. கணேசனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்து கொள்கின்றேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
விசிக தலைவர் திருமாவளவன்
நாகலாந்து மாநிலத்தின் ஆளுநரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான
இல.கணேசனின் மறைவு மிகுந்த கவலையளிக்கிறது. கருத்து முரண்களைக் கடந்து நட்பு பாராட்டும் நல்லியல்பு கொண்டவர். பொதுவாழ்க்கைக்காக தனிவாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
2001 ஆண்டில் இல்லம் தேடிவந்து என்னை ஊக்கப்படுத்தியவர். அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் அவரது கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை
நாகாலாந்து ஆளுனரும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான இல.கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
இல.கணேசன் அவர்கள் எளிமையானவர். பண்பாளர். அவரது மறைவு, அரசியல் துறைக்கும், மக்களுக்கும் பெரும் இழப்பாகும்.
இக்கடினமான நேரத்தில், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும்; தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநர் அண்ணன் இல. கணேசனின் மறைவையொட்டி, இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். அண்ணன் இல. கணேசனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ஓம் சாந்தி!

முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
நாகாலாந்து ஆளுநர் மரியாதைக்குரிய இல கணேசன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது தேசப்பற்றாளரான அவர் சுதந்திர தின அன்று மறைந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது. தேசப்பற்று தெய்வப்பற்று தமிழ் பற்று மிகுந்தவர். அரசியலில் மட்டுமல்ல இலக்கிய உலகிலும் பரிமளித்தவர். பாஜகவின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர்.
ஆர்.எஸ்.எஸி ல் தொண்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று ஆளுநராக தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்தவர். இன்று பாரதிய ஜனதா கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அத்தனை தலைவர்களையும் உருவாக்கியவர். பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல இலக்கியவாதிகளுக்கு பக்க பலமாக இருந்தவர். அதில் அரசியலில் அவருக்கு நிர்வாகியாக பணியாற்றியது மட்டுமல்லாமல் பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பிலும் அவரோடு நிர்வாகியாக பணியாற்றும் பாக்கியம் பெற்றவள்.
கட்சியில் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் வழி வகுத்தவர். அவர் இழப்பு மிகப்பெரிய இழப்பு அவரை இழந்து வாடும் அவர் உறவினர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அரசியல் முரண்களைக் கடந்து அனைவரிடமும் நட்பாகப் பழகும் பெருந்தன்மையும், பேரன்பும் கொண்ட ஐயா இல.கணேசன், திருமணம் செய்துகொள்ளாமல் ஏற்ற கொள்கைக்காக தம் வாழ்வை முற்று முழுதாக அர்ப்பணித்து இறுதிவரை உறுதியாக வாழ்ந்து மறைந்த பெருந்தகையாவார்!
ஐயாவின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
கண்ணியமிக்கத் தலைவராகத் திகழ்ந்த இல கணேசனை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், இந்நாள் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசனின் மரணச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இயக்கத்தாருக்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தர்மபுரம் ஆதீனம்
நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் இம்மண்ணுலகை விட்டு நீத்தார் எனும் செய்தி கேட்டு துயரம் அடைந்தோம். நம் ஆதீனத்தோடு மிக்க ஈடுபாடு கொண்டவர்கள். தாமரை இலக்கிய வட்டத்தில் பல நிகழ்ச்சியில் கலந்துள்ளோம். பழக இனியவர். மாற்றாரும் மதிக்கும் தகைசால்புடையவர். ஆன்மா சாந்தியடையட்டும்.

கவிஞர் வைரமுத்து
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் மறைவு துயரம் தருகிறது. யாரையும் புண்படுத்தாத
பண்பட்ட அரசியல் தலைவர். பாரதிய ஜனதா கட்சியில் ஓர் இலக்கியவாதி.
ஆன்மிக இலக்கியம் வளர்ப்பதற்காகவே பொற்றாமரை என்ற களம் கண்டவர்; என்னையும் அழைத்துப் பேசவைத்தவர். நாகாலாந்து வாருங்கள் காணாத இயற்கை கண்டு கவிதை எழுதலாம் என்று ஆசையோடு அழைத்தவர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது உரையின் திறம்பற்றிச் சொல்லிக் கரம்பற்றிப் பாராட்டினேன். மறைவு எதிர்பாராதது, போய் வாருங்கள் நல்லவரே தாமரை மட்டுமல்ல சூரியனும் துக்கம் கேட்கிறது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
நாகாலாந்து ஆளுநரும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கொள்கைகளைப் பரப்பிய முக்கிய கொள்கையாளருமான நண்பர் இல. கணேசன் (வயது 80) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.
கொள்கையில் நேர் எதிரானவர்களான நாங்கள் இருவரும், நட்பில் நல்ல நண்பர்கள் என்பதை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட நன்கு அறிவர். கொள்கை வேறு; பண்பாடு – நட்பு வேறு.
மேடையில் பேசினாலும் நனி நாகரிகத்துடன் பேசி எவரிடத்திலும் அப்படியே நடந்து கொள்ளும் நல்ல மனிதர். அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கும், அவரது இயக்கக் கொள்கையாளர்களுக்கும் மட்டும் இழப்பல்ல. பண்பான அரசியல் பொதுவாழ்வுக்கும் ஒரு பெரும் இழப்பு!
அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நடிகர் சரத்குமார்
நாகாலாந்து மாநிலத்தின் கவர்னரும், இயக்கத்தின் மூத்த தலைவருமான திரு.இல.கணேசன் அவர்கள் வயதுமூப்பு காரணமாக உடல்நிலை குறைவால் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர், திருமணம் செய்யாமல் பொதுவாழ்க்கைக்காக அவரை அர்ப்பணித்துக் கொண்டு, படிப்படியாக பாரதிய ஜனதா கட்சியில் உயர்ந்து கவர்னராக பொறுப்பாற்றி சிறப்பாக செயல்பட்டவர்.
அன்னாரின் மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.