உகாதி திருநாளில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டான ‘உகாதி’ பண்டிகை இன்று (மார்ச் 19), தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான உகாதி, வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் விழாவாகும். இது புதிய வாழ்வின் தொடக்கமாகவும், செழிப்பின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. மக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, வாசல்களில் மாவிலைத் தோரணங்கள் கட்டி, அறுசுவை கலந்த ‘உகாதி பச்சடி’ தயாரித்து இந்தப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 19) தனது எக்ஸ் பதிவில், “தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!

மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் வெல்வோம் ஒன்றாக!

ADVERTISEMENT

இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! Dravidian Model 2.0 அமையட்டும்!” என தெரிவித்துள்ளார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது வாழ்த்து செய்தியில், “தெலுங்கு கன்னட சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள், அனைவரிடமும் அன்பு மகிழ்ச்சி வளம், சகோதரத்துவம் தழைக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் தனது அறிக்கையில், “உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை வெவ்வேறானதாக இருந்தாலும், வாழும் இடம் தமிழ்நாடு தான் என்ற உணர்வோடு, பலநூறு ஆண்டுகள் கடந்தும் தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமும் நல்ல உறவைப் பேணி, நட்புறவு கொண்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவது வேற்றுமையில் ஒற்றுமைக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

மலரும் இப்புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தை வழங்குவதோடு, அவர்களுக்கும் தமிழக மக்களுக்குமான நட்புணர்வை மேலும் வலுப்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.”என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share