தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிமுகம் செய்ய இருந்த அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி (App) அறிமுக நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று ஜூலை 20-ந் தேதி MY TVK என்ற தவெக உறுப்பினர் சேர்க்கைக்காக செயலி அறிமுகப்படுத்தப்படப்பட இருந்தது. ஆனால் இன்று அந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் தவெக வட்டாரங்களில் விசாரித்த போது, ஆதவ் அர்ஜூனா பொறுப்பில்தான் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி உருவாக்கப்பட்டது. திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு முழக்கத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை, ஆப் மூலமே செயல்படுத்தப்படுகிறது. அதைப் போலவே நாமும் செய்ய வேண்டும் என்பதுதான் விஜய்யின் விருப்பம். இதற்காகத்தான் இந்த செயலி உருவாக்கப்பட்டது.
இந்த செயலியை அறிமுகம் செய்து இதனை எப்படி செயல்படுத்துவது என்பது தொடர்பாக தவெகவினருக்கு பயிற்சி அளிக்க முகாம்களும் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த செயலியில் கடைசி நேரத்தில் டெக்னிக்கல் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதனால் இன்று இந்த செயலி அறிமுகம் செய்யப்படவில்லை என்கின்றனர்.