கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்திற்கு சென்ற கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காண இயலாததால் அவரது ரசிகர்கள் தண்ணீர் பாட்டிகள், இருக்கைகளை தூக்கி எறிந்தனர். மேலும் மெஸ்ஸி அங்கிருந்து உடனடியாக கிளம்பியதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கோட் டூர் ஆஃப் இந்தியா 2025’ என்ற பயண திட்டத்தின்படி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (டிசம்பர் 13) அதிகாலை இந்தியாவிற்கு வந்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த மெஸ்ஸிக்கு அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கிருந்த படி லேக் டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 70 அடி உயர மெஸ்ஸியின் உருவ சிலையை ஷாருக்கானுடன் இணைந்து திறந்து வைத்தார்.
இந்நிலையில் மெஸ்ஸியின் வருகையை ஒட்டி கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைதானத்திற்கு வருகை தந்த மெஸ்சியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் கரகோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகளும், சில ரசிகர்களும் இருந்ததால் இருக்கையில் இருந்தவர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் மெஸ்ஸி உடனடியாக அங்கிருந்து கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். தங்கள் கைகளில் இருந்த தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இருக்கைகளை மைதானத்திற்குள் தூக்கி எறிந்தனர். அதன் பிறகு மைதானத்தின் மையப் பகுதிக்குள் புகுந்து கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த கூடாரங்களை சேதப்படுத்தினர்.
இதன் காரணமாக அப்பகுதியில் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
குறிப்பாக 78 ஆயிரம் இருக்கை வசதிகள் கொண்ட சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சிக்காக சுமார் ரூ.3,800 முதல் 11,000 வரை டிக்கெட்கள் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் ஒரு சில நிமிடங்கள் கூட மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தை முன்வைத்து ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
