தமிழக வெற்றிக் கழகத்தின் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்கு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “திமுக மிரட்டியதன் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து பின்வாங்கினார்” என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தக் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், “ஆதவ் அர்ஜுனாவின் கருத்து உண்மைக்கு மாறானது; காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தின் மனைவி லதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் ரஜினி சினிமாவில் கோலோச்சுவது” குறித்த கேள்விக்கு, “கடவுளின் அருள், மக்களின் அன்பு, அவரின் கடின உழைப்பு தான் காரணம். இதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.
மேலும், திமுகவின் மிரட்டல் காரணமாக ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதிலிருந்து பின்வாங்கினார் என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்த கேள்விக்கு முதலில் “நோ காமென்ட்ஸ்” என்று பதிலளித்தார். பின்னர், “அது உண்மை இல்லை என்று ரஜினிகாந்த் சொல்லிவிட்டாரே.. தவறான அவதூறுகளைப் பரப்பக் கூடாது என்று சொல்லிவிட்டார். அவரது அறிக்கையைப் படித்தாலே தெரியும்” என்றார்.
இந்தச் சூழலில் ரஜினிகாந்த் மற்றும் ரசிகர்களின் மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்த கேள்விக்கு, “கண்டிப்பாக தவறாக இருந்தால் எல்லோரையும் பாதிக்கும் இல்லையா?” என்று தெரிவித்தார்.
