கரூரில் நேற்று நாம் தொலைத்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? அப்படிப்பட்டவர்கள் இன்று இல்லை என நினைக்கும்போது மனம் பதறுகிறது என லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஜனாதிபதி முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்து இன்று (செப்டம்பர் 28) வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், கரூரில் நேற்று நடந்த விபத்தை நினைத்து இதுவரை என் மனது பதறிக் கொண்டிருக்கிறது. இந்த மாறி கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். நெரிசல் என்பது நம் கையில் இல்லை. அதிலிருந்து தப்பிப்பது கடினம். உயிரிழந்தவர்களின் இழப்பை எதை கொடுத்தும் ஈடு செய்ய முடியாது.
இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சி நடந்தால், அதில் நாம் எப்படி ஒற்றுமையோடும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என மக்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது.
ஜனங்களே, பொதுமக்களே, என் அன்பான தமிழ் மக்களே… எங்கு கூட்டம் சேர்ந்தாலும் பாதுகாப்பை மட்டும் விட்டுவிடாதீர்கள். குழந்தைகள், பெண்களால் கடைசி நிமிடத்தில் ஓடமுடியாது. நெரிசல் ஏற்பட்டபின் அந்த இடத்திலிருந்து நாம் நகர்வது கடினமான விஷயம்.
இனியும் இப்படியொரு துயரம் நிகழாமல் இருக்க அரசு, பொதுமக்கள், காவல்துறை, நிகழ்ச்சி நடத்துவோர் என அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும்.
நேற்று நாம் தொலைத்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? அவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பற்றி என்ன தெரியும்? அப்படிப்பட்டவர்கள் இன்று இல்லை என நினைக்கும்போது மனம் பதறுகிறது.
உயிர்நீத்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். உயிர்நீத்தவர்களை நினைத்து நினைத்து நம் மனம் தவிக்கத்தான் முடியும். இனி இப்படி நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை” என லதா கூறியிருந்தார்.