சினிமாவில் ஜெயிப்பதற்கும் தோற்பதற்கும் இதுதான் விதிகள் என்று எதுவுமே கிடையாது. ஒரு பாதையில் போனவர் ஜெயிப்பார். அதே பாணியில் அவர் வழியிலேயே போனவர் தோற்பார்.
இன்னொரு பாதையில் போனவர் தோற்பார் . அந்தப் பாதையில் அவரைப் போலவே போன ஒருவர் ஜெயிப்பார் .
‘இதெல்லாம் எங்க முன்னேறப் போகுது?’ என்று நினைக்கப்படுபவர் ஊரையே விலைக்கு வாங்குவார் . தமிழ் சினிமாவையே கலக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் காணாமல் போவார்
இதில் திவ்ய பாரதி எந்த ரகம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
ஆரம்பத்தில் பல டிவி விளம்பரங்களில் நடித்த திவ்யபாரதி முப்பரிமாணம் என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தார் . படம் ஓடாத நிலையில் ஒரு பரிமாணம் கூட வெளிப்படவில்லை.
நான்கு ஆண்டுகள் கழித்து ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக பேச்சிலர் படத்தில் நடித்தார் . அதில் மிக அட்டகாசமான ரோல் . பிரமாதமாக நடித்து இருந்தார். ஆனால் படம் வெற்றி பெறவில்லை.
இருந்தாலும் திவ்யபாரதிக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று ஆருடம் சொன்னது கோலிவுட் . ஆனால் அதுவும் நடக்கவில்லை.
ஆனால் எல்லோரும் அதிர்ச்சி அடையும் படியாக விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தார் . ‘விஜய் சேதுபதியின் மனைவி கேரக்டர் என்பதால் அதுவும் ஹீரோயின் தானே? அந்தப் படம் வெற்றி பெற்றால் வேறு படங்களில் மீண்டும் ஹீரோயின் ஆகலாம்’ என்ற அவரது திட்டத்தில் லாஜிக்கலாக தப்பு ஒன்றும் இல்லை.
மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனா ஜப்பானில் கூட ஓடியது . ஆனாலும் திவ்யபாரதிக்கு பலன் இல்லை
எனினும் ஜி வி பிரகாஷ் திவ்ய பாரதியைக் கை விடவில்லை. அவர் தயாரித்து ஹீரோவாக நடித்த கிங்ஸ்டன் படத்தில் ஹீரோயினாக திவ்யபாரதியை நடிக்கவைத்தார் ஜி வி பிரகாஷ் . படத்தில் அவரது காட்சிகள் குறைவாகவே இருந்தன . படம் ஓடி இருந்தால் கூட அவருக்கு பலன் கிடைத்திருக்கும் . ஆனால் அதுவும் ஓடவில்லை. இனிமேல் படத் தயாரிப்பே வேண்டாம் என்ற முடிவுக்கு ஜி வி பிரகாஷ் போனார்.
திவ்யபாரதி இப்போது மதில்மேல் காதல் என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துக் கொண்டு இருக்கிறார். ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் தகவல். என்ன கேரக்டர் என்றே தெரியவில்லை.
திவ்ய பாரதி மேல் வந்த ஒரு கிசுகிசுவும் அவரது பின்னடைவுக்கு காரணம் என்கிறார்கள். ஆனால் அது நமக்கு வேண்டாம் . வீ ஆர் டீசன்ட் பீப்பிள் யூ நோ?
- ராஜ திருமகன்
