நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை நீடிப்பதால் தமிழ்நாட்டில் 5 ரயில் திட்டங்கள் (Railway projects) தாமதமாவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் ஆகஸ்ட் 1-ந் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 2009-2014 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கான ஓதுக்கீடு ஆண்டுக்கு ரூ.879 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் இந்தத் தொகை ரூ.6626 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமான ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளை நிறைவேற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமடைவது காரணமாக உள்ளது. மொத்தம் 4315 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், 1038 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. 3277 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை இருப்பதால்
- திண்டிவனம்- திருவண்ணாமலை புதிய வழித்தடம் (71 கி.மீ)
- அத்திப்பட்டு-புத்தூர் புதிய வழித்தடம் (88 கி.மீ)
- மொரப்பூர்-தர்மபுரி (36 கி.மீ)
- மன்னார்குடி- பட்டுக்கோட்டை (41 கி.மீ.)
- தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை (52 கி.மீ.)
ஆகிய வழித்தடப் பணிகள் தாமதமாகியுள்ளன.
நிலம் கையகப்படுத்தாத திட்டங்கள்
- அத்திப்பட்டு-புத்தூர் புதிய வழித்தடம்
- மன்னார்குடி- பட்டுக்கோட்டை
- தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை
ஆகியவற்றுக்கு நிலம் எதுவும் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை
முடிவடைந்த 19 பணிகள்
- விழுப்புரம்- திண்டுக்கல் இரட்டை வழித்தடம்
- மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி இரட்டை வழித்தடம்
- மணியாச்சி-நாகர்கோயில் இரட்டை வழித்தடம்
- செங்கல்பட்டு-விழுப்புரம்
- தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது வழித்தடம்
- மயிலாடுதுறை–திருவாரூர்-காரைக்குடி அகல ரயில்பாதை உட்பட 19 பணிகள் முழுமையாக அல்லது பகுதியளவு முடிக்கப்பட்டுள்ளன.
நடைபெறும் ரயில்வே பணிகள்
- திண்டிவனம்-நகரி புதிய வழித்தடம் (184 கி.மீ.)
- மொரப்பூர்-தர்மபுரி புதிய வழித்தடம்
- நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி புதிய வழித்தடம்
- காரைக்கால்- பேரளம் புதிய வழித்தடம்
- திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இரட்டை வழித்தடம்
- அரக்கோணத்தில் 3-வது மற்றும் 4-வது ரயில்பாதை ஆகிய திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
- பட்டுக்கோட்டை வழியாக திருத்துறைப்பூண்டி-காரைக்குடி வழித்தடம், ராமநாதபுரம்-ராமேஸ்வரம் வழித்தடம், சின்னசேலம்-பொற்படாக்குறிச்சி வழித்தடம் ஆகியவற்றில் மின்மயமாக்கும் பணிகள் 96 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
அமிர்த பாரத ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புக்கு அடையாளம் காணப்பட்டு முதற்கட்டமாக 9 ரயில் நிலைய பணிகள் நிறைவடைந்துள்ளன.
சிதம்பரம், குழித்துறை, மன்னார்குடி, போளூர், சாமல்பட்டி, ஸ்ரீரங்கம், பரங்கிமலை, திருவண்ணாமலை, விருத்தாசலம் சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, சென்னை சென்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, உட்பட எஞ்சிய 68 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மொரப்பூர், பொம்மிடி, திருவாரூர் சந்திப்பு, வேலூர் கண்டோன்மென்ட், அரியலூர் ஆகிய ரயில் நிலையங்களில் புதிய கட்டடங்கள் கட்டுதல், வாகன நிறுத்துமிடங்கள், உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்துமிடங்கள், சாய்தளங்கள் போன்ற பணிகள் நிறைவடைந்துள்ளன.