கொச்சி கடத்தல் கும்பலுடன் சேர்ந்து ஐடி ஊழியரை கடத்தி அடித்து துன்புறுத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளதாக கேரளா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பிறந்த லட்சுமி மேனன், தமிழ் திரையுலகில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர், கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, கொம்பன், வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
எனினும் அதன்பின்னர் படிப்பு மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு படம் நடிக்காமல் இருந்த அவர், கடைசியாக லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 மற்றும் சப்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஐடி ஊழியரை கடத்திய வழக்கில் தற்போது அவர் சிக்கியுள்ளார்.
இதுதொடர்பாக கடத்தப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த அலியார் ஷா சலீம் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், “கடந்த 24ஆம் தேதி கொச்சியில் உள்ள பார் ஒன்றில் லட்சுமிமேனன் நண்பர்கள் மற்றும் ஆலுவாவைச் சேர்ந்த அலியார் ஷா சலீமின் நண்பர்கள் இடையே சண்டை ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்து அலியார் ஷா சலீம் மற்றும் அவரது நண்பர்கள் தப்பிக்க முயன்றபோது, இரவு 11.45 மணியளவில் எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலம் அருகே அவரது காரை லட்சுமி மேனன் நண்பர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், பின்னர் சலீமை கடுமையாக தாக்கி தங்களது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு, பின்னர் ஆலுவா-பராவூர் சந்திப்பில் இறக்கிவிடப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் லட்சுமி மேனன் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் போலீசாரிடம் கிடைத்துள்ளன.

இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல் ஆகியோரை எர்ணாகுளம் டவுன் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த நடிகை லட்சுமி மேனனை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாளத்திடம் பேசிய கொச்சி நகர காவல்துறை ஆணையர் புட்டா விமலாதித்யா இதனை உறுதிபடுத்தியுள்ளார். அவர், ”கடத்தல் சம்பவம் நடந்ததிலிருந்து நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகி விட்டார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சோனமோல் அளித்த புகாரின் பேரில், எதிர் குழுவைச் சேர்ந்த ஒருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.