மறைந்த நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசனின் உடல் பெசன்ட்நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் 42 குண்டுகள் இன்று (ஆகஸ்ட் 16) தகனம் செய்யப்பட்டது.
பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று மாலை 6.23 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 80.

அவரது உடல் நேற்று மாலை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து இன்று காலை பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல், தியாகராய நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் வைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினும், தமிழக முதல்வர் சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதே போன்று அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன், திமுக எம்.பி கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் சந்தன பேழையில் வைக்கப்பட்டபடி, உடல் தேசியக் கொடி போர்த்தி இன்று மாலை பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அப்போது தேசிய கொடி போர்த்தப்பட்ட சந்தனப் பேழையில் இல.கணேசனின் உடலை முப்படை வீரர்கள் சுமந்து வந்தனர்.

பின்னர் இல.கணேசன் உடலுக்கு நாகாலாந்து முதல்வர் நெய்பியோ ரியோ, அம்மாநில துணை முதல்வர்கள் ஜீலியாங், எந்துங்கோ பட்டான், தலைமை செயலாளர் செண்டியாங்கர் இம்ஜென் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அங்கு அவரது குடும்பத்தினர் சார்பில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, பின்னர் முப்படை சார்பில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இல.கணேசன் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தி தகனம் செய்யப்பட்டது.