பிரதமர் எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று சுதீஷ் கூறியுள்ளார்.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில், அக்கட்சிக்கு ஒரு எம்.பி. சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் தேமுதிக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தேமுதிக பொருளாளர் சுதீஷ் நேற்று பெற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் இன்று (மார்ச் 10) அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற எல்.கே.சுதீஷ் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த கூட்டணியால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது தேமுதிகவினர் விரும்பிய கூட்டணி. பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் திமுக கூட்டணிதான் அமோக வெற்றி பெறும்” என்றார்.
அவரிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெறுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர், பொறுமையாக இருங்கள்… விரைவில் சொல்வோம்” என்றார்.
அதுபோன்று திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரும் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
