தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இன்று இரவு7 மணிக்கு மாநாட்டில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிகவின் உரிமை மீட்பு மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுத் திடல் முழுவதும் கட்சிக் கொடிகள், பதாகைகள், தோரணங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால், குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகளுக்கு தனித்தனியாக நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநாட்டுத் திடலுக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ், “தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். பத்தாண்டுகளுக்குப் பின் விஜயகாந்த் இல்லாமல் ஒரு மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளது. கூட்டத்தில் பொதுமக்களும் கட்சியினரும் எதிர்பார்க்கும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று இரவு 7 மணிக்கு அறிவிப்பார்” எனத் தெரிவித்தார்.
