கருணையே கூடாது… குழந்தைகளை கொன்ற வழக்கு : ‘குன்றத்தூர் அபிராமி’-க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – தீர்ப்பு முழு விவரம்!

Published On:

| By vanangamudi

பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமியை சாகும் வரை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 24) உத்தரவு பிறப்பித்துள்ளது. kundrathur Child murder case

சென்னை குன்றத்தூரில் வசித்து வந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா ஆகிய இரு பிள்ளைகள் இருந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் அபிராமிக்கும் அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் பில் போடும் பணியில் இருந்த சுந்தரம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானதால், கணவர் குழந்தைகளை விட்டு சுந்தரத்துடன் வாழ விரும்பினார் அபிராமி.

ADVERTISEMENT

இதனால் தனது கணவர், குழந்தைகளுக்கு விஷ மாத்திரைகள் கொடுத்தார். ஆனால் நல்வாய்ப்பாக கணவர் விஜய்க்கு எதுவும் ஆகவில்லை. ஆனால், குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அபிராமி ஏ1 ஆகவும், சுந்தரம் ஏ2 ஆகவும் சேர்க்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது அபிராமி தரப்பில் தான் ஏற்கனவே 7 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாலும், தனது அம்மா, அப்பா வயதானவர்கள் என்பதால் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி ப.உ.செம்மல்,  அபிராமிக்கும், சுந்தரத்துக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த தீர்ப்பின் போது, “இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க முடியாது. இருவரும் சதி திட்டம் தீட்டி இரண்டு பிஞ்சு குழந்தைகளை கொன்றுள்ளனர். அதனால் அவர்களுக்கு கருணை காட்ட வேண்டிய அவசியமே இல்லை.

ஒரு பெற்ற தாய் குழந்தைகளை பராமரிக்க வேண்டிய கட்டுப்பாட்டிற்கு உள்ளானவர். 

ஆனால் இன்னொருவர் மீது கொண்ட ஆசை காரணமாக தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கொலை செய்தது கொடூரமான நிகழ்வு. 

தன்னை ஒரு தாய் தான் வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்திருப்பதை அபிராமி கவனத்தில் கொள்ளவில்லை. 

அபிராமியையும், சுந்தரத்தையும் தூக்கிலிட முடியாது. மகாத்மா காந்தி கூறியதை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். 

கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. மரண தண்டனையை அகிம்சைக்கு எதிரானதாகவே பார்க்கிறேன். உயிரை அளிப்பவர் மட்டுமே, அதை எடுக்க முடியும் என்று காந்தி கூறி இருக்கிறார். 

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அணுகு முறையை நாம் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

இரண்டு குழந்தைகளின் உயிர்களை பறித்தார்கள் என்பதற்காக மூன்றாவது நான்காவது உயிர்களைப் பறித்து விடக்கூடாது. 

மாச்சி சிங் vs பஞ்சாப் மாநிலம் வழக்கில், ‘ குற்றத்தின் கடுமையை அதிகப்படுத்தும் காரணிகள், குற்றத்தின் கடுமையை தணிக்கும் காரணிகள் ஆகிய இரண்டையும் சீர்தூக்கி பார்த்தும், குற்றத்தின் கடுமையை தணிக்கும் காரணிகளுக்கு முழு மதிப்பு கொடுத்தும் தான் ஆயுள் தண்டனை வழங்குவதா மரண தண்டனை வழங்குவதா என முடிவுக்கு வரவேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது” என்று நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மேத்தா vs தமிழ்நாடு வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட கவிதையையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

“நான் குழந்தை

எனது வருகைக்காக இந்த உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.

நான் என்ன ஆவேன்

உலகில் அனைவரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாகரீகம் நூலிழையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

ஏனெனில்

நான் எப்படியிருக்கின்றேன் என்பதைப் பொறுத்துதான்

நாளைய உலகம் அமையும்.

நான் குழந்தை

என் தலை விதி உங்கள் கையில் உள்ளது.

நான் வெல்வேனா, தோற்றுப்போய் விடுவேனா,

என்பதைப் பெரிதும் நிர்ணயிப்பது நீங்கள்தான்

உங்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன்.

மகிழ்ச்சியுடன் இருக்க என்ன தேவையோ

அவற்றை எனக்கு தாருங்கள்.

உங்களைக் கெஞ்சிக்கேட்கிறேன்.

நான் இந்த உலகின் நற்பேறு

எனப்பிறர் கூறுமளவிற்கு என்னை ஆளாக்குங்கள்” என்ற கவிதையை தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.

நீதிபதி செம்மல்

தொடர்ந்து அவர், “சராசரி பெண்மணி இத்தகைய கள்ளங்கபடமில்லாத குழந்தைகளைக் கொல்லும் கொடும் பாதக செயலை செய்யமாட்டார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்குவதற்கான சூழ்நிலைகள் மிக மிக துல்லியமாக இந்த வழக்கில் பொருந்தவில்லை.

அதேசமயம் குற்றவாளிகளுக்கு வெறுமனே ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கினால் போதுமானதல்ல என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. குற்றவாளிகள் சாகும் வரை சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

எனவே முதல் குற்றவாளி அபிராமிக்கும் இரண்டாவது குற்றவாளி சுந்தரத்துக்கும் இந்திய தண்டனை சட்ட பிரிவு 120(B), 302,109 ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இருவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அதோடு, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 120(b)க்கு ரூ.5000, 109 (2 எண்ணிக்கை) 5000 +5000 =10000 என முதல் குற்றவாளிக்கு 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது குற்றவாளிக்கு ரூ.15ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தார்.

அபராதத்தை கட்ட தவறினால் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி செம்மல் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, நீதிமன்றத்தில் அபராமியும், சுந்தரமும் கதறி அழுதனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share