முதல்வர் ஸ்டாலின் ‘அங்கிள்’ என விஜய் குறிப்பிட்டது எனக்கு தவறாக தெரியவில்லை என இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் இன்று (ஆகஸ்ட் 28) தெரிவித்தார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்க, மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அப்போது பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை நேரிடையாகவும், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோரை மறைமுகமாகவும், விமர்சித்திருந்தார்.
குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை ’அங்கிள்’ என விஜய் குறிப்பிட்டது அரசியல் கட்சிகள் மத்தியில் விவாத்தை ஏற்படுத்தியது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரபல இயக்குநரும் நடிகருமான கே.எஸ் ரவிக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “அங்கிள் என விஜய் குறிப்பிட்டது எனக்கு தவறாக தெரியவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் ஸ்டாலினை சந்திக்கும்போது அங்கிள் என்று தான் அழைப்பார். அதனையே பொதுவெளியில் பேசியுள்ளார். அப்படி தான் நான் பார்க்கிறேன்.
ஆனால் அந்த வார்த்தையை வேறு மாதிரி எடுத்துக்கொண்டு சிலர் பேசுகின்றனர். நாட்டுக்கு என்ன தேவையோ நல்லதோ அதை பாருங்கள், செய்யுங்கள்.
நான் ரெட் ஜெயண்ட் மூவிஸுக்கு இரண்டு படங்கள் பண்ணியிருக்கிறேன். ஸ்டாலின் அவர்கள் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். நானே ’வணக்கம் அங்கிள்’ என்று தான் சொல்வேன். அது ஒன்றும் தப்பான வார்த்தையாக தெரியவில்லை.
மாநாட்டில் அவருடைய தொண்டர்கள் இருந்தார்கள். அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் அப்படி பேசியிருக்கலாம். குறை சொல்லும் நோக்கத்தில் அங்கிள் என சொன்னதாக எனக்கு தோன்றவில்லை. தமிழில் மாமா என்று கூப்பிட்டால் தான் தவறாக போயிருக்கும். விஜய் அப்படி கூப்பிடவில்லையே” என கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.