விமான நிலையத்தில் குவிந்த அரசியல் தலைவர்கள் : மோடியை வரவேற்க செல்லாத கிருஷ்ணசாமி

Published On:

| By Kavi

பிரதமர் மோடியை வரவேற்க புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செல்லவில்லை.

கோவையில் தென்னிந்திய இயற்கை மாநாடு இன்று (நவம்பர் 19) நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையொட்டி இன்று மதியம்  ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை வரவேற்றார். விமானத்திலிருந்து இறங்கி வந்த பிரதமர் மோடியின் கையை பிடித்து சிரித்த முகத்துடன் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக 2024ஆம் ஆண்டு பாஜக கூட்டணியை முறித்துகொண்ட சமயத்தில் பிரதமர் மோடி பலமுறை தமிழ்நாடு வந்தபோது அவரை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. வரவேற்க கூட செல்லவில்லை. இந்தசூழலில் தேர்தல் நெருங்கும் வேளையில் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் இன்று நேரில் வரவேற்றுள்ளார்.

ADVERTISEMENT

அதுபோன்று பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர்.

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கையில் எலுமிச்சை பழத்தை வைத்துக்கொண்டு பிரதமரை வரவேற்றார். அப்போது அண்ணாமலையின் கையை பிடித்துக்கொண்ட பிரதமர் மோடி செல்லமாக அவரது தோளில் தட்டிக்கொடுத்துள்ளார்.

அண்ணாமலை அருகே நின்றிருந்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், தாமரை மொட்டுடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார். தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என்று அக்கட்சித் தலைவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஏசி சண்முகம் மலராத தாமரையை கொடுத்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

இப்படி பிரதமரை வரவேற்ற தலைவர்கள் செய்த சின்ன சின்ன விஷயமும் அரசியலில் கூர்ந்து கவனிக்கப்படும் நிலையில், மோடியை வரவேற்க கிருஷ்ணசாமி வரவில்லை என்பதும் பேசு பொருளாகியிருக்கிறது.

புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணாசாமி பெயரும் பிரதமரை வரவேற்கும் தலைவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவர் விமான நிலையத்துக்கு வரவில்லை.

சமீப நாட்களாக கிருஷ்ணசாமி தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள் என்றும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். அதேபோன்று அவரது கட்சி சார்பில் விஜய்யுடன் பேசி வருவதாக தகவல்கள் வரும் நிலையில், கிருஷ்ணசாமி மோடியை வரவேற்க செல்லாதது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share