‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் பேசும் காமெடி வசனம் பிரபலமானது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நம் கண் ஆரோக்கியமாக இருந்த ஒருவர், நோயால் பாதிக்கப்பட்டு உருகுலைந்து ஒடுங்கி போய் இருப்பதை பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும் என்பதே உண்மை.
திரையுலகில் அப்படி ஒரு காலத்தில் பிரபலங்களாக வலம் வந்த பலர் நோய் பாதிப்பிற்கு உள்ளாகி ஆள் அடையாளம் மாறி போனதை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் ஒருகாலத்தில் ஹீரோவாக வலம் வந்த நடிகர் அபிநய்யும் சேர்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யார் இந்த அபிநய்?
தமிழ் திரையுலகில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில், தனுஷுடன் அறிமுகமான மற்றொரு நடிகர் தான் அபிநய். அப்படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஜங்ஷன் (2002), சிங்கார சென்னை (2004) மற்றும் பொன் மேகலை (2005) ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதுவரை தமிழ், மலையாள திரையுலகில் 15 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜமாலுக்கு தமிழில் டப்பிங் குரல் கொடுத்தவர் அபிநய் தான். அதேபோன்று அஞ்சான், பையா, காக்கா முட்டை ஆகிய படங்களுக்கு முக்கிய கதாப்பாத்திரங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இதுதவிர விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.
என்ன ஆச்சு?
ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்பு இல்லாமல் தவித்த அபிநய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வறுமை காரணமாக அம்மா உணவகத்தில் சாப்பிடும் நிலை ஏற்பட்டதாக நேர்காணல் ஒன்றில் கண்ணீரோடு தெரிவித்தது பலரையும் கண்கலங்க செய்தது.
மேலும் அவர் லிவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் போதிய நிதி இல்லாததால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.
ஒருகாலத்தில் ஹேண்ட்சம் பாயாக வலம் வந்தவர் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
நடிகர் பாலா நிதியுதவி!
இந்த நிலையில் தான் நடிகர் KPY பாலா இன்று அபிநய்யின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவருக்கு ஆறுதல் தெரிவித்து, மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இதனையடுத்து பலரும் நடிகர் பாலாவை பாராட்டி வரும் வேளையில், நடிகர் அபிநய் உடல்நலம் பெற்று மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.