மதுபோதையில் அரசு ஊழியர்களை ஊராட்சிமன்ற செயலாளர் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் வட்டத்திற்குட்பட்ட கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற செயலாளராக பணிபுரிந்து வருகிறார் ஏழுமலை.
சமீபத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு ஊராட்சி அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த அரசு ஊழியர்களை அடித்து காலால் எட்டி மிதித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் ’ஊராட்சித் தலைவர் தான் அடிக்க சொன்னார்’ என்று போதையில் அவர் கூறியதும் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட மேடவாக்கம் காவல்நிலைய போலீசாரை நமது மின்னம்பலம் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுவரை இதுதொடர்பாக எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. இந்த வீடியோ இன்று காலை தான் எங்களுக்கு கிடைத்தது. புகார்கள் வரவில்லையென்றாலும், நாங்களே இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளனர்.