வேடசந்தூர் திமுக பிரமுகர் வீரா சாமிநாதனை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் வீரா சாமிநாதன்.
2023-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடனான நெருக்கம் காரணமாக வீரா சாமிநாதன் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.
வீரா சாமிநாதன் மகன் திருமணத்தை கடந்த ஆண்டு அக்டோபரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்திருந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் திமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ. காந்திராஜன், வீரா சாமிநாதன் மற்றும் கோ. ரவிசங்கர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நாம் எழுதி இருந்தோம்.
கடந்த சில மாதங்களாக வேடசந்தூர் தொகுதியில் பல்வேறு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம்களையும் வீரா சாமிநாதன் நடத்தி வந்தார்.

(கத்தி குத்து சம்பவத்துக்கு சற்று முன்னர் எடுக்கப்பட்ட படம்)
இந்த பின்னணியில் இன்று (பிப்ரவரி 21) காலை வேடசந்தூரில் வீரா சாமிநாதனை அவரது வீட்டில் இளைஞர் ஒருவர் சந்தித்தார். வீரா சாமிநாதனுக்கு சால்வை அணிவித்த அந்த இளைஞர், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென, வீரா சாமிநாதனை அந்த இளைஞர் கத்தியால் குத்தினார். இதைத் தடுக்க முயன்ற வீரா சாமிநாதன் ஆதரவாளர் குளத்தூர் காளனம்பட்டி நாச்சிமுத்துவுக்கும் கத்தி குத்து விழுந்தது.
இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வீரா சாமிநாதன் மற்றும் நாச்சிமுத்துவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அங்கிருந்து தப்ப முயன்ற இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
கத்தி குத்தில் காயமடைந்த வீரா சாமிநாதன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் விசாரித்த போது, ”வீரா சாமிநாதனை கத்தியால் குத்திய இளைஞர் எரியோடு மத்தனம்பட்டி- பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்துள்ளது. வீரா சாமிநாதனை எதற்காக கத்தியால் குத்தினார்? என விசாரித்து வருகிறோம்” என்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக திமுகவினரிடம் நாம் விசாரித்த போது, “வீரா சாமிநாதன் நடத்தி வந்த நிறுவனம் ஒன்றில் மணிகண்டன் ஏற்கனவே பணிபுரிந்து வந்தார்; பணம் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம்” என்றும் கூறுகின்றனர்.
இச் சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
