கிட்னி முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற வலியுறுத்திய தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 10) நிராகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை புரோக்கர்கள் மூலம் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறுநீரகத்தை தானம் பெற்றதாக புகார் எழுந்தது. திருச்சி, பெரம்பலுாரில் இரு தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக, ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், ”சிறப்பு புலனாய்வுக்குழுவை நாங்கள் எதிர்க்கவில்லை, அதிகாரி நியமனத்தை மட்டுமே எதிர்க்கிறோம். தமிழக அரசு தரப்பில் நாங்கள் தரும் 10 அதிகாரிகளின் பட்டியலில் இருந்து தகுதியானவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற அமர்வு, ”சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மட்டும் ஏன் இத்தனை மேல்முறையீடுகள் வருகிறது? என்று கேள்வி எழுப்பியது.
மேலும் கிட்னி முறைகேடு நடைபெற்ற மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய அதிகாரிகளை சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு நாங்கள் முரண்படுகிறோம். கிட்னி முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை” எனக் கூறி இந்த வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.
அதே வேளையில், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்த கருத்துகளை நீக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.