பிரபல தாதா பத்ரா (நவீன் சந்திரா) அத்தனை அயோக்கியத்தனங்களையும் கொடூரங்களையும் செய்கிற வெறி பிடித்த மனிதன். குழந்தைகள் கடத்தல், போதைப்பொருள் கடத்தலும் அவற்றில் உண்டு.
எனினும் கொஞ்ச நாளாக சூழல் கருதி குழந்தைகள் கடத்தலை நிறுத்தி வைத்து இருக்கிறான்.
ஆனால் அவனது தம்பி ருத்ரா (விக்ராந்த்) அண்ணனுக்குத் தெரியாமல் குழந்தைக் கடத்தலை பணத்துக்காக செய்கிறான்.
சஸ்பென்ஷனில் இருந்தால் கூட சஸ்பென்ஸ் ஆக வேலை செய்யும் போலீஸ் அதிகாரி ஒருவர் (கிச்சா சுதீப்).
ருத்ராவைக் கைது செய்து குழந்தைகளை மீட்க களம் இறங்குகிறார் போலீஸ் அதிகாரி.
ருத்ராவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தம்பியை தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறான் பத்ரா.
மக்களின் ஆதரவு பெற்ற பெண் முதல்வர் லோகநாயகி, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சூழலில், தான் இறந்து விட்டால் தனக்குப் பிறகு கட்சியின் அடுத்த சீனியர் தலைவர் ஒருவர்தான் முதல்வராக வேண்டுமென்று முடிவு செய்கிறார்.
இது பிடிக்காத முதல்வரின் கணவனும் மகனும், மகனுக்கு முதல்வர் பதவியை தரச் சொல்கிறார்கள். முதல்வர் மறுக்க, அம்மாவைக் கொன்றுவிட்டு, அம்மா தன்னை முதல்வராக கடிதம் கொடுத்து விட்டதாகக் கூறி, முதல்வர் பதவிக்கு ஆயத்தமாகிறார் மகன்.
முதல்வரை அவரது மகன் கொல்வதை ரகசியமாக மொபைல் மூலம் படம் பிடிக்கிறார் ஒரு மருத்துவர். அந்த மருத்துவரின் மகனான– எப்போதும் தனது போனில் வீடியோ கேம்ஸ் ஆடும் – சிறுவன், அவரது போனை எடுத்துக் கொள்கிறான்.
அந்த நேரம் பார்த்து மருத்துவரைக் கொல்ல முதல்வர் மகனின் ஆட்கள் வர, பையன் போனோடு தப்பிக்கிறான். அந்தப் பையன் கடத்தப்படும் குழந்தைகளில் ஒருவனாக சிக்கிக் கொள்கிறான்.
தான் கொலை செய்த வீடியோ வெளியே போகாமல் வந்து விட வேண்டும் என்று திட்டமிடும் முதல்வர் மகன், ஒரே நேரத்தில் போலீசில் ஒரு குழு மற்றும் ருத்ரா இருவரின் உதவியையும் நாடுகிறார்.
மாறாக நாயக போலீஸ் அதிகாரி, முதல்வர் மகனுக்கு எதிராகவும் குழந்தைகளை மீட்கவும் போராடுகிறார்.
ருத்ரா அந்தக் குழந்தைகளை ஒரு அணையின் கட்டிடப் பகுதி ஒன்றில் அடைத்து வைத்திருக்கிறான். அணையில் வெள்ளம் ஓர் அளவுக்கு மேல் ஏறினால் குழந்தைகள் மூழ்கி ஜல சமாதியாகி விடும் என்ற நிலை. அந்த இடம் போலீஸ் தரப்புக்கு தெரியவில்லை.
ஒரு சூழலில் ருத்ராவை, நேர்மையான போலீஸ் அதிகாரிகளின் டீமில் உள்ள சிலர் வேறு வழியின்றி கொன்று விடுகின்றனர்.
விஷயம் அறிந்த பத்ரா, தனது தம்பியைக் கொன்ற போலீஸ் அதிகாரியை அழித்து ஒழிக்க திட்டமிடுகிறான். முதல்வரின் மகன் தனது அம்மாவை தான் கொன்ற அந்த வீடியோவை எப்படியாவது கைப்பற்றி அழிப்பது அல்லது அந்தக் குழந்தைகளை அப்படியே அழித்து வீடியோ யாருக்கும் கிடைக்காமல் போகச் செய்வது என்று முடிவு செய்கிறான்.
பத்ராவும் முதல்வர் மகனும் சேர்ந்து செயல்பட, நேர்மையான போலீஸ் அதிகாரியும் அவரது டீமும் என்ன ஆனது? குழந்தைகள் பிழைத்தார்களா? முதல்வர் மகன் அநியாயமாக முதல்வர் ஆனாரா? இல்லை நியாயம் வென்றதா என்பதே,
சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, குரு சோமசுந்தரம், தீப்ஷிகா, ரோஷினி நடிப்பில் விஜய் கார்த்திகேயன் இயக்கி, கன்னடப் படமாகவும், கொஞ்சம் தமிழ் கலந்த படமாகவும் வெளி வந்திருக்கும் மார்க்.
நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்படும் பில்டப் எல்லாம் ஓவரோ ஓவர் ரகம் என்றாலும் அதுதானே தெலுங்கு கன்னட சினிமாவின் அடிநாதம் . என்னதான் சத்யஜோதி பிலிம்ஸும் சேர்ந்து தயாரித்தாலும் அடிப்படையில் இது கன்னடப் படம்தானே. எனவே ஓகே தான்.
இயக்குனர் விஜய் கார்த்திகேயனின் படமாக்கல் கமர்ஷியலாக சிறப்பாக இருக்கிறது. அவரது நீண்ட பணி அனுபவம் மேக்கிங்கில் தெரிகிறது.
கருமையின் ஆளுமை நிறைந்த சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு படத்துக்கு சிறப்பாகப் பொருந்துகிறது. சாதாரண காட்சிகளைக் கூட தூக்கிக் கொடுக்கிறது ஒளிப்பதிவு.
பட்டையைக் கிளப்பி இருக்கிறது அஜ்னீஷ் லோக்நாத் இசை. படத்தில் டாப் ஸ்கோர் பெறுவது மியூசிக் ஸ்கோர் தான். சபாஷ் அஜ்.
அதே போல சண்டைக் காட்சிகள் சும்மா தெறிக்க விடுகின்றன.
கலை இயக்கமும் சிறப்பு. தயாரிப்புத் தரமும் அருமை.
நல்ல கேரக்டர் கொடுத்தால் அசத்தி எடுக்கும் அற்புத நடிகன் கிச்சா சுதீப். எனவே அவர் இந்த கேரக்டரில் கூட சிறப்பாக செய்திருக்கிறார். ஆவேசமான கேரக்டரில் அசத்துகிறார் நவீன் சந்திரா. அந்த சத்தமும் வேகமும் அவர் அதை வெளிப்படுத்தும் விதமும் கொஞ்சம் கூட ஓவராகத் தெரியவில்லை. சிறப்பு..
இந்தப் படத்திலும் விக்ராந்த், குறை சொல்ல வாய்ப்பில்லாத அதே நேரம் பாராட்டவும் வாய்ப்பில்லாத நடிப்பையே கொடுத்துள்ளார். அவருக்கென்று ஸ்பெஷல் மொமெண்ட்டுகளை கேரக்டரில் அல்லது நடிப்பில் கொண்டு வர முயல வேண்டும். விக்ராந்த் ஜெயிக்க வேண்டியவர்.
வெட்டி அப்படியே மொத்தமாக தூக்கி எறிந்து விட்டு, இடத்தை கூட்டி சுத்தம் பண்ணலாம் என்று சொல்லக் கூடிய கேரக்டரில் குரு(காமா) சோமா சுந்தரம்.
ஜி எம் குமார் உட்கார்ந்தே இருக்கிறார் எனில் சுப்பு பஞ்சு நின்றுகொண்டே இருக்கிறார்.
இந்தப் படத்திலும் தன்னை நிரூபிக்க முயல்கிறார் யோகிபாபு. ஆனால் முடியல.
தமிழ் ஹீரோக்களை அவர் கலாய்க்கும் போது, ரஜினி, விஜய், அஜித் எல்லாம் அவரை முழுக்க முழுக்க கலாய்க்க விட்டு அப்புறம் பதில் சொல்வார்கள். ஆனால் கிச்சா சுதீப் விடுவாரா என்ன?
யோகிபாபு பேசி முடிப்பதற்குள் கன்னத்தில் அறைந்து, மிரட்டி பாதியிலேயே நிறுத்தி விடுகிறார் கிச்சா சுதீப். சைக்கிள் கேப்பில் டப்பிங்கில் ஏதாவது டயலாக் போடக் கூட இடம் இல்லாமல் தடுமாறி இருக்கிறார் யோகிபாபு..
இது எல்லாம் கூட ஓகே. இவ்வளவு அட்டகாசமான மேக்கிங் உள்ள படத்துக்கு எழுத்துதான் ஏகத்துக்கும் பலவீனமாக இருக்கிறது.
கதை பழுது என்றால் கூட திரைக்கதையில் வீடு கட்டி விளையாட வேண்டும் இல்லையா?
நூறு முறை பார்த்து சலித்த படங்களில் இருந்து ஒவ்வொரு சீனாக எடுத்து, அவற்றை உருக்கி காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து, தட்டி எடுத்து சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி வரிசையாக அடுக்கி இருக்கிறார்கள். எந்த ஒரு சீனும் அழுத்தமாக எழுதப்படாமல், ‘ நான் பாட்டுக்கு வாரேன்.. நீ பாத்தா பாரு பாக்காட்டி போ ” என்பது போல நகர்கிறது.
பல காட்சிகள் அல்ஜீப்ரா கணக்கு மூடையே தருகின்றன.
கிளைமாக்ஸ் ரொம்ப நீளம்.
குழந்தைகள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க, கிச்சா சுதீப்பும் நவீன் சந்திராவும், ஸ்லோஓஓஓ…. வான நிதானமான பில்டப்களில் ஒருவருக்கு ஒருவர் அல்லைகளைக் குறி வைத்து குறி வைத்து அடித்துக் கொள்கிறார்கள்.
‘ இந்தப் பட ஹீரோ மற்றும் போலீசாரை நம்பினா நாம தண்ணியிலயே மூழ்கி சாக வேண்டியதுதான்..” என்று கடத்தி வைக்கப்பட்ட சிறுவர்களே பாதி தூரம் அவர்களாகவே வெளியே வந்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்த நீளம் காரணமாக, பிரம்மாதமாக எடுக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றும் அந்தக் காட்சி கூட தண்ணீரில் ஊறி நசநசத்துப் போய் விட்டது.
இப்படி பாரிய உழைப்பும், தொழில் நுட்பத் தரமும், தயாரிப்பு தாராளமும் மார்க்கில் இருந்தும் கதை திரைக்கதை சரியில்லாமல் போனது படத்துக்கு பலவீனம் தான்.
இதில் தமிழ் உச்சரிப்பில் வேறு வேறு கிச்சு கிச்சு மூட்டுகிறார், கிச்சா சுதீப்.
அலறும் குழந்தைகளிடம் போனில் ”பயப்படாதீங்க.. பயப்படாதீங்க…” என்று சொல்வதற்குப் பதில் “பாயப் போடாதீங்க.. பாயப் போடாதீங்க..” என்கிறார். அவ்வளவு தண்ணீர் ஓடும்போது அவர்கள் ஏன் சார் பாயைப் போடப் போகிறார்கள். டப்பிங் எடுத்தவர்கள் கவனமாக இருந்திருக்கலாம்.
ஒரு வெற்றி படத்தை உருவாக்க, பண வசதி, வேண்டிய கலைஞர்களை ஒன்றிணைக்கும் திறமை, மற்ற அதிகாரங்கள் இவற்றை விட எழுத்தே முக்கியம் என்பதை இன்னொரு முறை நிருபிக்கும் படம்.
மொத்தத்தில் மார்க்… ரிமார்க் அதிகம்
— ராஜ திருமகன்
