கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பேருந்து பாலியல் அத்துமீறல் தொடர்பான வீடியோவை வெளியிட்ட யூடியூபர் ஷிம்ஜிதா முஸ்தஃபா கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஓடும் பேருந்தில் ஒரு பெண் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானதாக வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், கூட்டம் அதிகமாக இருக்கும் அந்த பேருந்தில் பயணிக்கும் பெண் அருகில் நிற்கும் ஆணின் கை, இப்பெண் மீது உரசுவது பதிவாகியிருந்தது.
இந்த வீடியோவை அந்த பெண் யூடியூபரான ஷிம்ஜிதா இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார்.
தொடர்ந்து அந்த ஆண் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் (42) என்பது தெரியவந்தது. இந்த வீடியோ வைரலானதால் அவரை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்.
அதன்பின், அவ்வளவு கூட்டத்தில் தெரியாமல் கை பட்டிருக்கும். ரீல்ஸ் மோகத்தில் இப்படி செய்வதா? ஒரு உயிர் போய்விட்டதே என பலரும் ஷிம்ஜிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், யூடியூபர் ஷிம்ஜிதா முஸ்தஃபா மீது இந்திய நியாய சன்ஹிதா (BNS) 2023 இன் பிரிவு 108 இன் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஷிம்ஜிதா தலைமறைவானார். முன் ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்தசூழலில், ஷிம்ஜிதாவை தேடி வந்த கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் வாதகராவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து இன்று (ஜனவரி 21) கைது செய்தனர்.
