தமிழ் திரையுலகைச் சேர்ந்த சில நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் சமூக அக்கறையுடன் நலப்பணிகளை மேற்கொண்டு வருவது காலம்காலமாகத் தொடர்கிற விஷயம்.
அவர்களில் அதீதமான ஈடுபாட்டைக் காட்டுபவர்களின் முயற்சிகள் ஊடகங்களில் செய்திகள் ஆவதும், மக்களின் வரவேற்பைப் பெறுவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், தந்தை சிவகுமார் வழியில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் உயர்கல்வி பெற உதவும் வகையில் ‘அகரம் அறக்கட்டளை’யை நிறுவிச் செயல்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா.
சமீபத்தில் இதன் 15ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியானது.
இந்த நிலையில், சூர்யாவுக்கும் அகரம் அறக்கட்டளைக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டிருக்கும் அவர், “சூர்யாவின் முயற்சி பாராட்டுக்குரியது, அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வது” என்று கூறியிருக்கிறார்.
“சமூகத்தில் வறிய நிலையில் இருக்கும் மாணவ மாணவியர் கல்வி வழியே வாழ்வில் உயர அகரம் அறக்கட்டளை மேற்கொண்டுவரும் முயற்சிகள் ஊக்கமளிப்பதாக உள்ளது. பொருளாதார வசதி இல்லாமல் இந்தியா முழுக்கப் பல மாணவர்கள் கல்வியைப் பாதியில் நிறுத்துவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அகரத்தின் செயல்பாடு உண்மையிலேயே அற்புதமானதாக உள்ளது.
குறிப்பாக, ஏழை மாணவ மாணவியரை அடையாளம் கண்டு அவர்களது கல்வி பூர்த்தியடைய உதவுவது வியப்பூட்டுவதாக உள்ளது” என்று பாராட்டியிருக்கிறார் ஷைலஜா.
ஆக, எல்லை தாண்டி அண்டை மாநிலத்திற்கும் பரவியிருக்கிறது சூர்யாவின் அறக்கட்டளை சிந்தனை!