கேரளா உள்ளாட்சித் தேர்தலில் 6 மாநகராட்சிகளில் 4-ல் காங்கிரஸும் இடதுசாரிகளும் பாஜகவும் தலா 1-ஐயும் கைப்பற்றி உள்ளன.
கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி, 45 ஆண்டுகளாக இடதுசாரிகள் வசம் இருந்தது. இந்த முறை பாஜக கைப்பற்றி இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
கொச்சி, கொல்லம், திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கூட்டணியும் கோழிக்கோடு மாநகராட்சியை இடதுசாரிகளின் LDF முன்னணியும் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜகவும் கைப்பற்றி உள்ளன.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக 50-ல் வெற்றி பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் 16 இடங்களை கூடுதலாக பெற்றுள்ளது பாஜக.
கோழிக்கோடு மாநகராட்சியில் 76 வார்டுகளில் பாஜக 13 இடங்களில் வென்றுள்ளது. 2020 தேர்தலை விட 6 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது.
கொல்லம் மாநகராட்சியில் மொத்தம் 56 வார்டுகளில் பாஜக 12-ல் வென்றுள்ளது. 2020-ம் ஆண்டு தேர்தலைவிட 6 இடங்கள் கூடுதலாகும்.
திருச்சூர் மாநகராட்சியில் 56 வார்டுகளில் 8-ல் மட்டும் பாஜக வென்றுள்ளது. கடந்த தேர்தலைவிட கூடுதலாக 2 இடங்கள். 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூரில் பாஜக வென்றது. பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சராகி இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி.
கொச்சி மாநகராட்சியில் 76 வார்டுகளில் பாஜக 6-ல் வென்றுள்ளது. கடந்த தேர்தலைவிட ஒரு இடம் அதிகம்.
கண்ணூர் மாநகராட்சியில் 56 வார்டுகளில் 4-ல் பாஜக வென்றுள்ளது. கடந்த தேர்தலைவிட 3 தொகுதிகள் கூடுதல்.
