இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் SIR-க்கு எதிராக கேரளா மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் SIR-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளன. தற்போது உச்சநீதிமன்றத்தில் கேரளா மாநில அரசும் SIR-க்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், ” கேரளாவில் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது SIR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது நிர்வாக ரீதியாக பெரும் குழப்பத்தையும் சுமையையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் கேரளா உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை SIR நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தற்போது கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; கேரளா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம்தான் நடைபெற இருக்கிறது; ஆகையால் SIR நடவடிக்கையை உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும்” என்றும் கேரளா அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் டிசம்பர் 9, டிசம்பர் 11 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 13-ந் தேதி நடைபெறும்.
திமுக என்ன சொன்னது?
முன்னதாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் நவம்பர் 3-ந் தேதி SIR-க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதில், ““எஸ்.ஐ.ஆர். நடைமுறைப்படுத்த உகந்த காலம் இதுவல்ல என்றும்; தேர்தல் ஆணையத்துக்கு இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கு அதிகாரம் இல்லை என்றும்; அரசிலமைப்புச் சட்டம் தந்த அதிகாரங்களை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுவதாவும்; தகுதி உள்ளவர்கள் நீக்கப்படுவதற்கும் – தகுதியற்றோர் சேர்க்கப்படுவதற்கும் ஏதுவான வகையில் இந்த நடைமுறை அமைந்துள்ளதாகவும்; இந்த எஸ்.ஐ.ஆர்.-ஐ நடைமுறைபடுத்தினால், இலட்சக்கணக்கான தமிழ்நாடு வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
