கேரளாவில் சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தேவிகுளம் ராஜேந்திரன் திடீரென பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுரா, மேற்கு வங்க மாநிலங்கள் இடதுசாரிகளின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தன. ஆனால் தற்போது இந்த இரு மாநிலங்களிலும் இடதுசாரிகளின் இருப்பே கேள்விக்குறியாகி இருக்கிறது.
திரிபுராவில் பெரும்பான்மை காங்கிரஸ் கட்சியினர் கொத்து கொத்தாக பாஜகவில் இணைந்தனர். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பெரும்பாலானோர் பாஜகவில் இணைந்தனர். இன்குலாப் ஜிந்தாபாந்த் என முழங்கியவர்கள் திடீரென ஜெய் ஸ்ரீராம் என முழங்கினர். இதனால் திரிபுராவில் பாஜக ஆளும் கட்சியாகவும் மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத எதிர்க்கட்சியாகவும் இருந்து வருகிறது.
திரிபுரா, மேற்கு வங்கத்தைப் போல கேரளாவில் இடதுசாரிகள் வலிமையாக உள்ளனர். இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியை தாண்டி பாஜகவால் வளர முடியவில்லை.
கேரளாவில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக வலிமையாக கால் பதிக்க போராடுகிறது. இந்த பின்னணியில் சிபிஎம் கட்சியின் எம்.எல்.ஏ.வாக 3 முறை பணியாற்றிய தேவிகுளம் ராஜேந்திரன் திடீரென பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரத்தில் நேற்று கேரளா மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார் ராஜேந்திரன். கேரளாவின் இடுக்கி மாவட்டம் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதியில் 2006, 2011, 2016 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வானார்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் ராஜேந்திரனுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அத்தேர்தலில் ஏ. ராஜாவை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தது சிபிஎம். இதனால் கட்சித் தலைமைக்கு எதிராக கொந்தளித்தார் ராஜேந்திரன். இதனையடுத்து 2022-ம் ஆண்டு சிபிஎம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
