மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக
கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜனவரி 12-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளா மாநில அரசுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மறுப்பு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து ஜனவரி 12-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் நடத்த உள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மத்திய அரசுக்கு எதிராக கேரளா இடதுசாரிகள் போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக 2019 டிசம்பர் 16-ந் தேதி மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பினராயி விஜயன் பங்கேற்றார்.
2024-ம் ஆண்டு பிப்ரவரியில், மத்திய அரசின் கூட்டாட்சி மீதான தாக்குதலையும் கேரளாவிற்கான நிதிப் புறக்கணிப்பையும் கண்டித்து டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு பினராயி விஜயன் தலைமை தாங்கினார். அப்போராட்டத்தில் கேரளா அமைச்சர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
