கேரளா மாநிலம் இடுக்கியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் உள்ள Orange Hotel-ல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயராமன், செல்வம் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
முதலில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய ஜெயராமன் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனையடுத்து செல்வம் மற்றும் சுந்தரபாண்டியன் இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால் மூவரும் நீண்டநேரமாகியும் கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியே வராததால் ஹோட்டல் உரிமையாளர்கள் சந்தேகமடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கட்டப்பனை தீயணைப்புத் துறை அதிகாரி டி.முருகன் தலைமையிலான குழுவினர், ஹோட்டல் கழிவுநீர் தொட்டியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் 3 தொழிலாளர்களும் உயிரிழந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராமன், கம்பத்தைச் சேர்ந்தவர்; சுந்தர பாண்டியன் மற்றும் செல்வம் இருவரும் கூடலூரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.