சாலையில் செல்லும் கார்களின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் வாசகங்கள் பல நேரங்களில் நமக்குச் சிரிப்பை வரவழைக்கும். “அம்மாவின் அன்புப் பரிசு”, “டாடிஸ் கிஃப்ட்” (Daddy’s Gift) போன்ற பாசப் பிழிவுகளைத் தாண்டி, இப்போது ஒரு வாசகம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதுதான் – “KEEP DISTANCE – EMI PENDING”.
இது வெறும் ஸ்டிக்கர் அல்ல; நடுத்தர வர்க்கத்தின் குரல்!
பொதுவாக “ஹாரன் அடிக்காதீர்” (Don’t Honk) அல்லது “வழி விடுங்கள்” என்றுதான் பார்த்திருப்போம். ஆனால், இந்த “EMI Pending” வாசகம் ஒரு எதார்த்தமான உண்மையைச் முகத்தில் அறைவது போல் சொல்கிறது. இதன் அர்த்தம் எளிமையானது: “தயவு செய்து இடைவெளி விட்டு வாருங்கள்; நான் இன்னும் இந்தக் காருக்குக் கடன் கட்டிக்கொண்டிருக்கிறேன். இடித்துச் சேதாரம் ஆனால், அதைச் சரிசெய்யும் நிலையில் நான் இல்லை!” என்பதுதான் அந்த ஓட்டுநரின் வெளிப்படையான வாக்குமூலம்.
https://www.instagram.com/reel/DScZHMqEluh/
ஏன் இந்த வாசகம் வைரலானது?
இந்தியாவில், குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் கார் வாங்குவது என்பது பலருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவை நனவாக்கப் பெரும்பாலனவர்கள் வங்கி லோன் (Loan) தான் போடுகிறார்கள். மாதம் பிறந்தால் சம்பளத்தில் பாதியை ‘இஎம்ஐ’ (EMI) ஆகக் கட்டும் வலி, அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்.
புதிதாக வாங்கிய காரில், ஒரு சிறிய கீறல் விழுந்தால் கூட, கார் உரிமையாளரின் நெஞ்சில் கீறல் விழுந்தது போல வலிக்கும். அதுவும் கடன் இன்னும் முடியாத நிலையில், விபத்து ஏற்பட்டால் செலவைச் சமாளிப்பது திண்டாட்டம். “இந்தக் கார் இன்னும் முழுசா எனக்குச் சொந்தமாகல… பேங்க் (Bank) காரனுக்குத்தான் சொந்தம். அதனால பாத்து வாங்கப்பா!” என்று தன்னுடைய நிலையை நகைச்சுவையாகச் சொல்லி, பின்னால் வருபவரை எச்சரிக்கும் இந்த ஐடியா பலரையும் கவர்ந்துள்ளது.
சிரிப்பலையும் சிந்தனையும்:
இதை யாரோ ஒரு புத்திசாலி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, அது இப்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்குத் தீனியாகிவிட்டது. “உண்மைதானே பாஸ்…”, “என் மனக்குமுறலை அப்படியே சொல்லிட்டீங்க” என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். முன்பு “பேபி ஆன் போர்டு” (Baby on board) என்று ஒட்டுவார்கள். இப்போது “பேங்க் லோன் ஆன் போர்டு” (Bank Loan on board) என்பதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்.
போக்குவரத்து நெரிசலில் டென்ஷனாக இருக்கும்போது, முன்னால் செல்லும் காரில் இப்படி ஒரு வாசகத்தைப் பார்த்தால் நிச்சயம் நமக்கு ஒரு புன்னகை வரும். அது அந்த ஓட்டுநரின் மீதான கோபத்தைக் குறைத்துப் பரிதாபத்தை வரவழைக்கிறது. சிரிப்பு ஒருபக்கம் இருந்தாலும், பாதுகாப்பான இடைவெளி விட்டுச் செல்வது எப்போதுமே நல்லதுதான். அதுவும் ‘EMI’ கட்டும் காருக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மரியாதையே கொடுக்கலாமே!
