பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியிலிருந்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா இன்று (செப்டம்பர் 2) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா.
பிஆர்எஸ் கட்சியின் எம்.எல்.சி யாக இருந்த கவிதாவுக்கும் சகோதரர் ராமராவுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதைத்தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேச தொடங்கினார் கவிதா.
சந்திரசேகர ராவுக்கு எதிரான மத்திய அரசின் விசாரணைக்கு அவரது உறவினரான மூத்த பிஆர்எஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹரிஷ் ராவ் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
தெலங்கானாவில் காலேஸ்வரம் நீர் பாசன திட்டம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்த நிலையில், முன்னாள் நீர் பாசனத் துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் மற்றும் முன்னாள் எம்.பி சந்தோஷ் குமார் ஆகியோர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து சொத்துக்களை குவித்து கே.சி.ஆரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
சந்திரசேகர ராவுக்கு நெருக்கமான சிலர் அவரது பெயரை பயன்படுத்தி பல வழிகளில் பயன் அடைந்துள்ளனர். அவர்களின் தவறான செயல்களால் தான் இன்று சந்திரசேகர ராவ் பெயர் அவதூறுக்கு உள்ளாகியுள்ளது. 5 ஆண்டுகள் நீர் பாசன அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ் இதில் முக்கியமானவர்.
ஹரிஷ்ராவையும் சந்தோஷ் குமாரையும் ரேவந்த் ரெட்டி பாதுகாக்கிறார். கேசிஆர்-ஐ குறி வைக்க மூன்று பேரும் கைகோர்த்து செயல்படுகின்றனர். தனது தந்தை முத்து போல் தூய்மையானவர். அவர் சோதனையை எதிர்கொள்வது வேதனையாக இருக்கிறது என்று கட்சியின் சகாக்கள் மீது புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனது மகள் கவிதாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் சந்திரசேகர ராவ். கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாக இருப்பதால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.
கவிதா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது தெலங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் 2024 மார்ச் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கவிதா. இதே வழக்கில் 2024 ஏப்ரல் 11ஆம் தேதி சிபிஐயும் கவிதாவை கைது செய்தது.
இந்த இரு வழக்கிலும் 2024 ஆகஸ்ட் 27ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கவிதாவுக்கு ஜாமின் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.