உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இதுவரை கைது செய்யப்படாதது குறித்து இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதியின் விமர்சனம் கவனம் பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடந்த 6ஆம் தேதி வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது நீதிமன்ற அறையில் இருந்த ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர், தலைமை நீதிபதி மீது செருப்பு வீச முயன்றது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அப்போது அவர் ’சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என அவர் கூச்சலிட்டார். இதுதொடர்பாக நாடுமுழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து இந்திய பார் கவுன்சில் ராகேஷ் கிஷோரை இடை நீக்கம் செய்தது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது பேட்டியில் “தனது செயலுக்கான அனைத்து விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான் இதைச் செய்தேன். இதையெல்லாம் செய்வதற்கு கடவுள்தான் என்னை தூண்டினார்” என பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
எனினும் வழக்கறிஞர் ராகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்படாதது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் செருப்பு வீசிய சம்பவம் தொடர்பாக இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதங்கத்துடன் விமர்சித்துள்ளார்.
அதில், “நீதிபதிகளை அவதூறாகப் பேசியதால், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கர்ணன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்..
(குறிப்பு: கைது செய்யப்பட்ட முன்னாள் நீதியரசர் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்)
உச்சநீதிமன்றத்தில் (பட்டியல் வகுப்பைச் சேர்ந்த) நீதியரசர் கவாய் மீது ராகேஷ் கிஷோர் (சர்மா) என்னும் வழக்கறிஞர்ஜி செருப்பு வீசினார்..
தண்டனை: வீசப்பட்ட அந்தச் செருப்பு கைது செய்யப்பட்டது” என பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.