கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூன் 27ஆம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் கவின் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதில் சுர்ஜித் போலீஸில் சரணடைந்த நிலையில், அவரது பெற்றோர்களான உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய வேண்டும் என்று கவினின் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்களை கைது செய்யும் வரை மருத்துவமனையில் இருக்கும் மகனின் உடலை வாங்கமாட்டோம் என்று மறுத்து வருகின்றனர்.
இந்தசூழலில் கவின் ஆணவ கொலை வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இன்று (ஜூலை 30) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “ இறந்த கவின் செல்வ கணேஷின் தாயார் கொடுத்த புகார் மனுவின் மீது பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.396/2025 சட்டப் பிரிவுகள் 296(b), 49, 103(1) BNS உ/இ சட்ட பிரிவுகள் 3(1)(r) 3(1)(s) 3(2)(v) ( தடுப்பு) சட்டம் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அவரது தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்டவரும். குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில், இது தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அதே நாளில் (27.072025) கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் மீது இன்று (30.07.2025) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். விசாரணை பாரபட்சமற்றதாகவும். வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக, இவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும். சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக. இந்த வழக்கு குற்றப்பிரிவு. குற்றப் புலனாய்வுத்துறை(CBCID)க்கு மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.