நெல்லையை அதிரவைத்த சாதி ஆணவப் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையில் பணிபுரிந்து வரும் கைதான சுர்ஜித்தின் பெற்றோரை பணிநீக்கம் செய்யக்கோரி, கொலையான கவின்குமாரின் தந்தை கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின்குமார். ஐடி ஊழியரான இவர், திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த போலீஸ் தம்பதியினரான சரவணன்- கிருஷ்ணகுமாரியின் மகளை காதலித்து வந்தார்.

இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் போலீஸ் தம்பதி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தாத்தா செல்லத்துரையை பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்த கவின்குமாரை, போலீஸ் தம்பதியின் மகனான சுர்ஜித், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், கவின்குமாரை சுர்ஜித் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே கவின்குமார் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனையடுத்து சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸ் தம்பதியான சரவணன்- கிருஷ்ணகுமார் மீதும் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவின்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கவினின் தந்தை பேசுகையில், “என் பையன் சென்னை ஐடி நிறுவனத்தில் மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறான். எங்கள் குடும்பம் பெரியது. எனது அப்பா 30 வருடமாக ஊராட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.
நேற்று மருத்துவமனைக்கு சென்ற என் மகனை, அந்த பொண்ணு தான் போன் போட்டு அழைத்துள்ளது. பின்னாடியே அவர் அண்ணனையும் ஏவி விட்டுள்ளார். தனியாக பேச வேண்டும் எனக் கூறி, என் பையனை அழைத்துச் சென்று, முகத்தில் மிளகாய் பொடித் தூவி அவனை வெட்டி கொலை செய்திருக்கிறான்.
போலீசாக உள்ள அவனது அம்மா, அப்பாவை பணி நீக்கம் செய்யனும். அவர்கள் போலீஸில் வேலை செய்வதால் தான் ஆணவக்கொலை செய்யலாம் என்ற திமிர் வந்துள்ளது.
எங்களுக்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் எனது மகனின் உடலை வாங்க மாட்டோம், போராட்டம் தொடரும்” என தெரிவித்துள்ளார்.