”தோழி சுபாஷிணிக்கு வணக்கம்” – சாதி ஆணவ கொலையான கவினின் காதலிக்கு கௌசல்யா கடிதம்!

Published On:

| By christopher

Kausalya's letter to Kavin's girlfriend on caste honor killing!

நெல்லையில் சாதி ஆணவ கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் காதலிக்கு கௌசல்யா எழுதியுள்ள உருக்கமான கடிதம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்ததால், தனது கணவர் சங்கரை சாதி ஆணவ கொலைக்கு பலிகொடுத்தவர் கெளசல்யா.

கொலை செய்யப்பட்ட சங்கருடன் கெளசல்யா

தற்போது சமூக செய்ற்பாட்டளராக உள்ள அவர், சமீபத்தில் நெல்லையில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் குமார் காதலிக்கு ஆறுதல் தெரிவித்து உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தோழி சுபாஷிணிக்கு, வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள்… என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும்.

ADVERTISEMENT

இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த , கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.

நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத் தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை(10 ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னை தங்கள் மகளாக பார்த்து கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்த காலில் நிற்க இன்று வரை உடன் இருக்கின்றனர்!

ADVERTISEMENT

எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ள வில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன். நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல் உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள்! எவராக இருந்தாலும் என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில்! உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்! நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்.

நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்” என கெளசல்யா எழுதியுள்ளார்.

சுர்ஜித்

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற விவசாயியின் மகனும், ஐடி ஊழியருமான 26 வயது கவின்குமாரும், நெல்லையைச் சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினியும் க காதலித்து வந்தனர்.

ஆனால் இருவரும் மாற்று சாதியினர் என்பதால், சுபாஷினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை வந்த கவின் குமாரை, சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் சரணடைந்த சுர்ஜித் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது போலீஸ் பெற்றோரான தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கவின்குமாரின் சாதி ஆணவ படுகொலை சம்பவத்திற்கு, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து வழக்கு இன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share