“இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கச்சத்தீவைப் பார்வையிட்டு, அந்தத் தீவை எந்தக் காலத்திலும் விட்டுத் தரமாட்டோம் என்று கூறியிருப்பது, தமிழக மீனவர்களின் உரிமைக்கும் , ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும், நேரடியாகச் சவால்விடும் அகந்தை மிகுந்தப் பேச்சு” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “கச்சத்தீவு என்பது இலங்கையின் சொத்து அல்ல! அது தமிழர்களின் உரிமை நிலம். எங்கள் முன்னோர்களின் வியர்வை, எங்கள் மீனவர்களின் இரத்தம், எங்கள் தாய்மொழி தமிழின் அடையாளங்கள் அனைத்தும் கலந்த புனித நிலம்.
இலங்கை அதிபரின் திமிர்ப் பேச்சுக்குப் பிறகும்,
ஒன்றிய அரசும், குறிப்பாகத் தமிழகம் சார்ந்த அமைச்சர்களும், இன்னும் மௌனமாக இருப்பது, வரலாற்றின் பெரும் துரோகம் ஆகும் .
கச்சத்தீவு விவகாரத்தில், இந்தியா நமது உரிமையை வலியுறுத்தத் தயங்கினால், அது தமிழக மக்களின் நம்பிக்கையை, முற்றிலும் இழக்கும் என்பதே உண்மை.
இதுவரை, எண்ணூறுக்கும் அதிகமானத் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றும், பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளப் படகுகளைப் பறித்தும், சிறையில் அடைத்தும், கொடுமை செய்து வரும், இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக, ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
அதோடு, தமிழக அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான சட்ட, அரசியல் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படாவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும், எச்சரிக்கை செய்கிறேன்” என்றும் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.