தவெக தலைவர் நடிகர் விஜய், கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுவதால், ‘எங்களுக்கு அருகே இருக்கும் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதிக்கு நாங்கள் உரிமை கோர முடியுமா?’ என இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில், தமிழக மீனவர் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தினார் அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய். அவரது இந்த பேச்சுக்கு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜய் ஹேரத் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் அந்த கட்சியின் தலைவரான கத்துக்குட்டி அரசியல்வாதி விஜய், கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என கூறியுள்ளார். இது கவலைக்குரியது.
காலந்தோறும் அரசியல் லாபங்களுக்காக பெரிய பெரிய அரசியல் கட்சிகள், தமிழ்நாட்டு மீனவர்களை ஏமாற்றுவதற்கும் அவர்களுடைய வாக்குகளை பெறுவதற்கும் இது போன்ற நாடகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை – இந்தியா இடையேயான கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து விஜய் தெரிந்து கொண்டு பேச வேண்டும். இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டுவிட முடியாது என்பது தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுக்கே தெரியும். இது வாக்கு வங்கி அரசியலுக்கான பேச்சுதானே தவிர வேறு எதுவுமே இல்லை.
இந்தியாவின் நிலத்தை சீனா கைப்பற்றி வருகிறது. அப்படி சீனா ஆக்கிரமித்த நிலத்தில் ஒரு இஞ்ச் அளவு கூட மீட்கப்படவில்லை. ஆனால் இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்போம் என பேசுகின்றனர்.. இது வேடிக்கையாக இருக்கிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு 30 மைல் தொலைவில் இருக்கிறது; இலங்கையின் நெடுந்தீவில் இருந்து தொண்டி, 30 மைல் தொலைவில் இருக்கிறது.
கச்சத்தீவில் இருந்து ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் 30 மைல் தொலைவில் உள்ளது.
ஆனால் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து வெறும் 18 மைல் தொலைவில்தான் தனுஷ்கோடி இருக்கிறது. அதற்காக தமிழ்நாட்டின் தனுஷ்கோடியை இலங்கைக்கு உரியது என உரிமை கொண்டாட முடியுமா?
தமிழகம்- இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சனை என்பது கச்சத்தீவு அல்ல- இழுவைமடி மீன்பிடித்தல்தான். இதற்காக கச்சத்தீவை மீட்பது என்பது தீர்வாகிவிட முடியாது. கச்சத்தீவின் ஒரு பகுதியை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தலாமே தவிர கச்சத்தீவை மீட்பது என்பது சாத்தியமில்லாதது. விஜய்யின் கச்சத்தீவு மீட்பு பேச்சு கண்டனத்துக்குரியது. இவ்வாறு என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.