இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவு, ‘இந்துக்களுக்கு சொந்தமானது’, ‘கச்சத்தீவில் சிவன் மற்றும் காளி கோவில் இருந்தது’ என்று இலங்கை சிவ சேனை அமைப்பின் பாலசிங்கம் செயமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தாரைவார்த்து கொடுத்தது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் குரல்.
இந்த நிலையில் அண்மையில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை சிவ சேனை அமைப்பின் பாலசிங்கம் செயமாறன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாலசிங்கம் செயமாறன் வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவு உள்ளிட்ட இலங்கையின் வடபகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரக் கூடாது என சிலர் நினைக்கின்றனர்.
கச்சத்தீவில் நாகர்கள், சிவன் கோவில் அமைத்து வழிபட்டனர். பரதவர்கள் காளி கோவில் அமைத்து வழிபட்டனர். “காளியாத்தா தந்த கடல் வாழ்வு” என வாழ்ந்த தமிழருக்கு சொந்தமானது கச்சத்தீவு.
கச்சத்தீவில் 100 ஆண்டுகள் மட்டுமே பழமையான அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்துக்காக கச்சத்தீவை சுற்றுலா மையமாக மாற்றாமல் இருக்கக் கூடாது. கச்சத்தீவை சுற்றுலா மையமாக்கினால் இலங்கையின் வடக்கு பகுதி வளம் கொழிக்கும். யாழ்ப்பாண சைவர்களின் பொருளாதாரம் மேம்படும் என தெரிவித்துள்ளார்.