காஷ்மீரின் அழகை ரசிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், தால் ஏரியில் (Dal Lake) ஷிகாரா படகில் சவாரி செய்வது வழக்கம். அப்படி ஒரு சவாரியின்போது, காஷ்மீர் படகோட்டி ஒருவர் சுற்றுலாப் பயணி ஒருவருக்குக் கொடுத்த நெத்தியடி பதில், தற்போது இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது.
நடந்தது என்ன? தால் ஏரியின் ரம்மியமான சூழலில் ஒரு சுற்றுலாப் பயணி ஷிகாரா படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அந்தப் படகோட்டி (Shikara wala), “சார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று இயல்பாகக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்தப் பயணி, “நாங்கள் இந்தியாவில் இருந்து வருகிறோம்” (India) என்று பதிலளித்துள்ளார். பொதுவாகக் காஷ்மீருக்குச் செல்பவர்கள், தங்களை அறியாமலேயே “நாங்கள் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறோம்” என்று சொல்வது வழக்கம். ஆனால், காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதிதானே?
படகோட்டியின் சாதுர்யமான பதில்: பயணியின் பதிலைக் கேட்ட அந்தப் படகோட்டி, எந்தக் கோபமும் இல்லாமல், முகத்தில் ஒரு புன்னகையோடு, “அப்போ… நாங்க என்ன பாகிஸ்தான்ல இருந்தா வரோம்? நாங்களும் இந்தியால இருந்துதான் வரோம்! (So am I from Pakistan? We are also Indians)” என்று நயமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த எதிர்பாராத பதிலைக் கேட்டு அந்தப் பயணியும் சிரித்துவிட்டார். அந்தப் படகோட்டி அதை ஒரு நகைச்சுவையாகச் சொன்னாலும், அதற்குள் இருந்த ஆழமான அர்த்தம் பலரையும் கவர்ந்துள்ளது.
இணையத்தில் பாராட்டு மழை: லக்ஷய் மேத்தா (Lakshay Mehta) என்பவர் ‘X’ தளத்தில் பகிர்ந்த இந்த வீடியோ, இப்போது வைரலாகி வருகிறது.
- “இதுதான் உண்மையான இந்தியா.”
- “பிரிவினை பேசுபவர்களுக்கு மத்தியில், அந்தப் படகோட்டியின் எளிய பதில் சவுக்கடி.”
- “எவ்வளவு அழகாக, அன்பாகப் புரிய வைத்துவிட்டார் பார்த்தீர்களா?” என்று நெட்டிசன்கள் அந்தப் படகோட்டியைக் கொண்டாடி வருகின்றனர்.
பாடம்: நாம் தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்குச் சென்றால், “நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்” என்று சொல்வோம். ஆனால் காஷ்மீர் செல்லும்போது மட்டும் “இந்தியாவிலிருந்து வருகிறோம்” என்று சொல்வது, நம்மையே அறியாமல் நமக்குள் இருக்கும் ஒரு மனத் தடையைக் காட்டுகிறது. அதை அந்த எளிய மனிதர் மிக அழகாக உடைத்தெறிந்துள்ளார்.
