ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பகல்ஹாமுக்கு சுற்றுலா சென்ற 26 பேர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர்.
சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பி செல்லும் இடமான அழகு கொழிக்கும் பகல்ஹாமில் நடந்த இந்த தாக்குதலால் டாக்சி டிரைவர்ஸ், ஹோட்டல் நடத்துபவர்கள், வியாபாரிகள் என சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்வாதாரம் நடத்தி வந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. kashmir tourism industry fears setback
2020-ஆம் ஆண்டு கோவிட் தொற்றுக்கு பிறகு, காஷ்மீர் சுற்றுலா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், இந்த தாக்குதல் காஷ்மீர் வாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்துபவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் (TAAI) முன்னாள் தலைவர் மயால் கூறும்போது,
“இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, பஹல்காமில் உள்ள இரண்டு ஹோட்டல்கள் உரிமையாளர்களிடம் பேசினேன். 60 சதவிகித சுற்றுலாப் பயணிகள் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கோவிட் தொற்றுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் இப்போது தான் சுற்றுலா புத்துயிர் பெறத் தொடங்கியது. இனிமேல் இங்கு சுற்றுலாப் பயணிகளும் வரப்போவதில்லை, வளர்ச்சியும் இல்லை. முழுக்க முழுக்க சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் காஷ்மீரின் தொழில்துறைக்கும் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கப்போகிறது” என்று கவலை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகளுக்கு முழு தொகையையும் ரீபண்ட் செய்ய விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா நிறுவன அதிகாரிகளிடம் பேசியுள்ளதாக, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுற்றுலா வந்த பயணிகள் திரும்பி செல்வதற்கான பயண ஏற்பாடுகளை அங்குள்ள டாக்சி டிரைவர்கள் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “சுற்றுலா பயணிகளை நம்பி தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வந்தோம். எங்களது வாழ்வாதாரமே போய்விட்டது. இருப்பினும் பயணிகள் பத்திரமாக திரும்ப அவர்களுக்கு இலவச சேவை செய்து வருகிறோம். இதற்கான தொடர்பு எண்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் பெரும்பாலும் இஸ்லாமிய இளைஞர்கள் தான் செயல்பட்டு வருகின்றனர்” என்றார்.