தவெக தலைவர் நடிகர் விஜய் அனுப்பி வைத்த ரூ.20 லட்சத்தை அவருக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி.
நடிகர் விஜய் செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; இவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சத்தை நிதி உதவியாக அவர்களது வங்கிக் கணக்கில் நடிகர் விஜய் செலுத்தி உள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு அழைத்து அவர்களிடம் ஆறுதலைப் பெற்றுக் கொண்டார் விஜய். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல் அவர்களை தமது இடத்துக்கே வரவழைத்து விஜய் ‘ஆறுதல் பெறுதல்’ நிகழ்ச்சியை நடத்தியது மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் சொல்லாதற்கு உயிரிழந்தவர்களில் ஒருவரான ரமேஷின் மனைவி சங்கவி கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளார். அத்துடன் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திரும்பவும் அவருக்கே அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் சங்கவி கூறியதாவது: விஜய் எங்களுக்கு நேரில் வந்துதான் ஆறுதல் தெரிவிப்பதாக சொல்லி இருந்தார். விஜய் எங்களை மாமல்லபுரத்தில் சந்திக்க அழைத்தும் நாங்கள் போகவில்லை.
ஆனால் எங்களுக்கே தெரியாமல் எங்களது குடும்பத்தினர் என 3 பேரை அழைத்து கொண்டு சென்றுள்ளனர்; எங்கள் பெயரை மிஸ்யூஸ் செய்துள்ளனர். உண்மையில் நாங்கள் யாரையும் அனுப்பவில்லை. எங்களது பெயரை தவறாகப் பயன்படுத்தி இருக்கின்றனர்.
நாங்கள் பணத்தை பெரிதாக எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு விஜய் நேரில் வந்து ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும். அதனால் விஜய் அனுப்பிய ரூ.20 லட்சத்தை அவருக்கே திருப்பி அனுப்பிவிட்டோம். விஜய் அனுப்பி வைத்த பணத்தால் என் கணவரின் உயிரை திருப்பி தந்துவிட முடியாது. மாமல்லபுரத்தில் விஜய் சந்தித்தது எங்களை அல்ல; எங்கள் குடும்பத்தின் பெயரில் அழைத்து செல்லப்பட்ட யாரோ சிலரைத்தான்.. அவர்கள் அப்படி சென்றது கூட பிறர் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். இவ்வாறு ரமேஷ் மனைவி சங்கவி கூறினார்.
