தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் பவுன்ராஜ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் கரூர் குற்றவியல் நீதிமன்ற அனுமதியின் படி இரண்டு நாள் கஸ்டடியில் எடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான எஸ்ஐடி குழு விசாரித்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவரும் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சூழலில் இருவருக்கும் விதிக்கப்பட்ட 15 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அப்போது ஜாமீன் வழங்க வேண்டும் என்று இருவரது சார்பிலும் வாதிடப்பட்டது.
எஸ்ஐடி தரப்பில் சிபிஐ விசாரணையை கையில் எடுக்கும் வரை இருவருக்கும் காவல் நீட்டிப்பு வழங்க கூடாது என்று கூறப்பட்டது.
இறுதியில் தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் இருவரும் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.