கரூர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி, தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு தடை கோரி தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, என்வி அஞ்சாரியா பெஞ்ச் இன்று (அக்டோபர் 10) விசாரித்தது.
இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அரசு தரப்பில் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள்,
- கரூர் பிரசாரம், ரோடு ஷோ நெறிமுறைகளுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்காக மாறியது?
- பிரசாரம் தொடர்பான ஒரு வழக்கில் SIT விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எப்படி?
- கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவை ஒரே நாளில் இருவேறு உத்தரவுகளை பிறப்பித்தது எப்படி?
- சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்தது கரூர் வழக்கை விசாரித்தது எப்படி?
- சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு விசாரித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியும் எடுத்து விசாரித்தது ஏன்?
- ஒரே வழக்கில் ஒரே நாளில் நீதிமன்றங்கள் இருவேறான உத்தரவுகளை பிறப்பிப்பது என்ன மாதிரியான நடைமுறை?
- தேர்தல் ரோடு ஷோ வழக்கில் விஜய் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துகளை முன்வைத்தது ஏன்?
என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
கரூர் விஜய் பிரசாரம் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை விசாரித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது உச்சநீதிமன்றம்.