41 பேரை பலி கொண்ட கரூர் பெருந்துயரம் குறித்து சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவில் இடம் பெறும் ஐபிஎஸ் அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு SIT விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மனுத் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. மேலும் சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அஜய் ரஸ்தோகி குழுவில் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டிராத தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழக ஐபிஎஸ் கேடர் அதிகாரிகளான சுமித் சரண் (சிபிஆர்பிஎப், டெல்லி), சோனல் வி.மிஸ்ரா (எல்லை பாதுகாப்புப் படை) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
