அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டிருக்கும் போது எதற்கு வருவாய் செயலாளர் பேட்டி அளித்தார் என்று கரூர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக பிரச்சாரத்தின் போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்தன.
இதுதொடர்பாக , தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் பி.அமுதா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
அரசுத் தரப்பில் பல்வேறு காணொளிகள் அடங்கிய வீடியோவும் வெளியிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இன்று (செப்டம்பர் 30) தனது எக்ஸ் பக்கத்தில், “கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது.
மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன?
இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா? ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை; அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான்.
மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” ஏன்று குறிப்பிட்டுள்ளார்.