கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் நாளை ஜனவரி 19-ந் தேதி மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து விஜய் இன்று தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
கரூரில் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
கரூரில் சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை நடத்தினர். பின்னர் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், கரூர் மா.செ.மதியழகன், கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்டோரை டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர் சிபிஐ அதிகாரிகள். 3 நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பின்னர் விஜய்க்கும் சம்மன் அனுப்பியது சிபிஐ.
இதனடிப்படையில் கடந்த 12-ந் தேதி டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை விவரங்களை நாம் விரிவாக பதிவு செய்துள்ளோம். கடந்த ஜனவரி 13-ந் தேதி 2-வது நாளாக விசாரணை நடைபெற இருந்தது. ஆனால் பொங்கல் முடிந்த பின்னர் விசாரணைக்கு ஆஜராவதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை சிபிஐ அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.
இதனடிப்படையில் விஜய்யிடம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார் விஜய்.
