கரூர் துயர சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாஜகவின் கலை கலாசார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (வயது 38), மாங்காட்டை சேர்ந்த தவெக உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடி தவெக உறுப்பினர் சரத்குமார் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கூட்ட நெரிசல் வழக்கு
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கில் கருர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அத்துடன் தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தவெக கரூர் மத்திய மாநகர செயலாளர் பவுன்ராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.