கரூர் பெருந்துயரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கின் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துவிட்டது.
அதே அக்டோபர் 3ஆம் தேதி அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், கரூர் பெருந்துயரம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இந்தநிலையில் உயர் நீதிமன்றம் அமைத்த, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (அக்டோபர் 10) நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள்.
தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இன்று பிற்பகல் 12 மணியளவில் வாதங்கள் தொடங்கியது.
விஜய்யை வெளியேற சொன்ன போலீஸ்
அப்போது தவெக வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் , ‘உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் தமிழக வெற்றிக் கழகம் இணைக்கப்படவில்லை. எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த நாங்கள் தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தவெக தலைவர்கள் சம்பவ இடத்தில் இல்லாமல் ஓடிவிட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில் தவெக தலைவரின் தலைமை பண்பு குறித்தெல்லாம் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சொல்லப்போனால், காவல்துறைதான் அங்கிருந்து விஜய்யை கிளம்புமாறு கூறியது. காவல்துறை கட்டாயப்படுத்தியதால் பொதுநோக்கத்தின் அடிப்படையில் விஜய் அங்கிருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்டவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க எங்கள் கட்சி தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, கூட்டத்தைக் கட்டுப்படுத்த நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுக்கக் கோரும் மனுவை அடிப்படையாகக் கொண்டது’ என்று வாதிட்டார்.
தவெக சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ‘இப்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு முன் தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அப்படி ஏதும் அனுமதி பெற்றதாக தகவல் இல்லை’ என்று தெரிவித்தார்.
மேலும், ‘விஜய் நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கிய வீடியோக்கள் இருந்தபோதும், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனினும் இதுதொடர்பாகவும் உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. அரசியல் ரீதியாக நாங்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறோம்.
மாநில போலீசாரை கொண்டு மட்டுமே சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே சிறப்பு விசாரணை குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி குழுவால் உண்மை வெளிவராது.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் ‘ என்று வாதங்களை முன்வைத்தார்.
எப்படி? எப்படி? எப்படி?

இதையடுத்து நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதாவது,
1.கரூர் கூட்ட நெரிசல் வழக்கு, மதுரை வரம்பிற்குள் தான் வருகிறது. ஒன்று கரூரில் உள்ள நீதிமன்றமோ அல்லது மதுரை கிளையோ விசாரித்திருக்க வேண்டும். அதை எப்படி சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது?
2. பிரச்சார கூட்டங்களுக்கு வழிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது எப்படி?
3.தேர்தல் பிரச்சாரம், ரோடு ஷோவுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கக் கோரிய வழக்கு குற்றவியல் வழக்காக மாறியது எப்படி?
4.ஒரே நாளில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது. இது எப்படி?
5.கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது எப்படி?
6.உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதி விசாரணைக்கு எடுத்தது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
குறிப்பாக நீதிபதி மகேஷ்வரி, ‘ என்னுடைய 15 ஆண்டுகால நீதிபதி அனுபவத்தில் சொல்கிறேன் இரு நீதிபதிகள் அமர்வு ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்தால், அந்த வழக்கு தனி நீதிபதி முன் வரும்போது அது நிறுத்தி வைக்கப்படும்’ என்று குறிப்பிட்டார்.
அரசு வாதங்கள் என்ன?
இந்நிலையில், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘சிறப்பு விசாரணைக் குழுவை அரசு அமைக்கவில்லை. உயர் நீதிமன்றம் தான் அமைத்திருக்கிறது. அந்த குழுவின் தலைவர் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சிறந்த அதிகாரி. சிபிஐயில் பணியாற்றியவர். இந்த வழக்கில் மட்டுமல்ல பல வழக்குகளில் எஸ்.ஐ.டி தலைவராக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டவர். நாட்டையே உலுக்கிய ரியான் இண்டர்நேஷனல் பள்ளி வழக்கில், சிபிஐ அதிகாரியாக அவர் உண்மையை வெளிகொண்டு வந்தார். 41 பேர் உயிரிழந்ததால்தான் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு உள்ளது” என்று வாதங்களை முன்வைத்தனர்.
மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ‘இந்த கூட்ட நெரிசலுக்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம். மதியம் 12 மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு, இரவு 7 மணிக்குதான் விஜய் வந்தார். காலை முதலே கூட்டம் கூட தொடங்கிவிட்டது’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வழக்கு விசாரணை மதிய உணவு இடைவெளிக்காக ஒத்திவைக்கப்பட்டு 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக வெற்றிக் கழகம் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதையும் நீதிபதிகள் விசாரித்தனர்.
சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்தை எதிர்த்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பன்னீர்செல்வம்(10) என்ற சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது, அவரது சார்பில் வழக்கறிஞர் தாம ஷேஷாத்திரி நாயுடு ஆஜராகி வாதாடினார்.
அவர், ‘இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை விடுவித்து கொள்வதற்காக ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பை போலீசார் நடத்தினர்’ என்று குற்றம்சாட்டினார்.
மற்றொரு மனுதாரரான தனது தங்கை மற்றும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை இழந்ததாகக் கூறப்படும் கரூரைச் சேர்ந்த எஸ்.பிரபாகரன் சார்பில், ‘காரணமில்லாமல் லத்தி சார்ஜ் செய்யப்பட்டது ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட, நம்பர் பிளேட் இல்லாத ஆம்புலன்ஸ்கள் கூட்டத்துக்குள் வந்தன. சமூக விரோத கும்பல் கூட்டத்தில் பொருட்களை வீசி குழப்பத்தை ஏற்படுத்தியது’ என்று தெரிவிக்கப்பட்டது
இதற்கு மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்வி, ‘காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. அப்படியிருக்கும் போது சிபிஐக்கு சாதாரணமாக எப்படி வழக்கை மாற்ற முடியும். மேலும் பன்னீர் செல்வத்தின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுதாரராக இல்லை’ என்று வாதிட்டார்.
இதற்கு பன்னீர் செல்வம் தந்தை சார்பில், ‘அப்போது துக்கத்தில் இருந்ததால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ விசாரணை கோரிய மற்றொரு மனுவுக்கு ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ‘கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே, பிற்பகல் 3 மணியளவில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஒரு துயரம் நடக்கப்போகிறது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். கூட்ட நெரிசல் திடீரென நிகழ்ந்ததல்ல. ஒரு நபர் செருப்பு வீசுகிறார். அதன்பின்னர் போலீசார் தடியடி நடத்துகின்றனர். இதன் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது’ என்று வாதங்களை முன்வைத்தார்.
மேலும் அவர், ‘ஒரே இரவில் அத்தனை உடல்களும் உடற்கூராய்வு செய்தது எப்படி? அதே இடத்தில் மற்றொரு அரசியல் கட்சியான அதிமுக பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்டபோது, குறுகலான இடம் என்று கூறி மறுப்புத் தெரிவித்த போலீசார் விஜய்யின் பிரச்சாரத்துக்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி? என்று கேள்விகளை எழுப்பினார்.
“600 போலீசார் பாதுகாப்பில் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் எங்கே இருந்தார்கள்?. ஒரு போலீசாருக்கு கூட காயம் ஏற்படவில்லையே?” என்றும் மனுதாரர்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் வில்சன் , “காலணி வீசப்பட்டதும், தடியடி நடத்தப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரவுடிகள் யாரும் கூட்டத்துக்குள் நுழையவில்லை” என்று கூறினார்.
இந்தநிலையில் நீதிபதி மகேஸ்வரி, “நிஜமாகவே எனக்கு ஒன்றும் புரியவில்லை. கோரிக்கை ஒன்று வைத்தால், உயர் நீதிமன்றம் எப்படி அதற்கு மாறாக உத்தரவை பிறப்பித்தது” என்று குறிப்பிட்டார். மேலும் அவர், “நள்ளிரவில் 3-4 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை நடத்தி முடித்தீர்களா? உடற்கூராய்வு மேடைகள் கரூரில் எத்தனை உள்ளன? ” என்று கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு வழக்கறிஞர் வில்சன், ‘உறவினர்கள் உடல்களை கேட்டதால், மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அருகாமை மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். கூடுதலாக 220 மருத்துவர்கள் மற்றும் 165 செவிலியர்கள் வந்தனர். அண்டை மாவட்டத்தில் மருத்துவ மாநாட்டிற்காக வந்த மருத்துவர்கள் தங்கியிருந்ததார்கள். அவர்கள் வரவழைக்கப்பட்டனர் ’ என்றார்.
“பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐக்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவியும். ஆனால் அவர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான மனித சக்திகள் (Limited Resource)தான் உள்ளனர். அதோடு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி கேட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழக அரசு விரிவான பதிலை அளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கின் உத்தரவையும் ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது சம்பவம் நடந்த பிறகு பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் கூட சென்று சந்திக்க வில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு, விஜய் நேரில் சென்றாரா இல்லையா என்பது இந்த வழக்கிற்கு தொடர்பில்லாதது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இருதரப்பும் பரஸ்பர குற்றம்சாட்டுவது முக்கியமானதல்ல… உண்மை வெளிவர வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“