கரூரில் நடிகர் விஜய்யின் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் தொடர்பான பாஜகவின் மனுவை உடனே விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நடிகர் விஜய் கரூரில் நேற்று (செப்டம்பர் 27) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, பாஜகவின் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீதிபதி செந்தில் குமார், உமா ஆனந்தன் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இது பொதுநலன் வழக்கு என்பதால் தாமாக – அதாவது ஒற்றை நீதிபதியாக இதனை விசாரிக்க முடியாது; இரு நீதிபதிகள்தான் விசாரிக்க முடியும் என உமா ஆனந்தன் கோரிக்கையை நிராகரித்தார்.
இதனிடையே, நடிகர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கோரி ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடையீட்டு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை நடிகர் விஜய்யின் பிரசார கூட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்காக இன்னும் பட்டியலிடவில்லை எனவும் கூறப்படுகிறது.