பராசக்தி படத்தில் வருவது ஹிஸ்டாரிக்கல் டாக்குமெண்ட்டா? ஆராய்ச்சியாளர்கள் செய்தார்களா? சரித்திர சாதனையாளர்கள் விளக்கி இருக்கிறார்களா? தயவுசெய்து அரசியலில் திணிக்காதீர்கள் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி இன்று (ஜனவரி 14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பராசக்தி படம் குறித்த கேள்விக்கு, “பராசக்தி திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. இரண்டு படத்தையும் நான் பார்க்கப் போவதாக இல்லை. திரைப்படத்தை வைத்து தமிழ்நாட்டு அரசியலை யாராவது நிர்ணயம் செய்யலாம் என்று நினைத்தார்கள் என்றால் அது தவறு.
அர்னால்டு முதலமைச்சராகி இருப்பாரா?
ஒரு காலத்தில் அர்னால்டு படம் தமிழகத்தில் அதிக அளவில் ஓடியது. அவர் முதலமைச்சராக ஆகியிருப்பாரா? திரைப்படத்தை வைத்து தமிழ்நாட்டு அரசியலையோ, தமிழ்நாட்டு வரலாற்றையோ,மக்கள் மனநிலையையோ
யாராவது வெளிப்படுத்தலாம் என்று நினைத்தால், அரசியல் புரிதல் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
என்னைப் பொறுத்த வரை இரண்டு படங்களுமே ஒரு கமர்சியல் ஆர்கனைசேஷன். அவர்களுக்கு லாபமோ நஷ்டமோ வருவதைப் பற்றி எனக்கு கவலை கிடையாது. இது எதையும் செட் செய்து காட்டப் போவதில்லை. ஆகவே அந்த இரண்டு படங்களையும் நான் பார்க்கப் போவதுமில்லை.
இது என்ன ஹிஸ்டாரிக்கல் டாக்குமெண்ட் படமா? இந்தப் படத்தில் வருவது ஹிஸ்டாரிக்கல் டாக்குமெண்ட்டா? ஆராய்ச்சியாளர்கள் செய்தார்களா? சரித்திர சாதனையாளர்கள் விளக்கி இருக்கிறார்களா? தயவுசெய்து அரசியலில் திணிக்காதீர்கள். மூன்று மணி நேரமா? எவ்வளவு நேரம் அந்தப் படம் ஓடும் என்பது கூட எனக்குத் தெரியாது. அவர்கள் படமாக செட் செய்கிறார்கள்.
தேவையில்லாத பிரச்சினை
தமிழ்நாடு அரசியலில் இது என்ன செய்யப் போகிறது? இதுதான் மக்கள் மனநிலையை வெளிப்படுத்துகிறது என்று யாராவது நினைத்தார்கள் என்றால், அரசியல் புரியாதவர்கள் தான் அப்படிப் பேசுவார்கள். படக்குழுவினர் டெல்லி சென்று பொங்கல் விழா கொண்டாடட்டும். ஆஸ்கார் விழாவிற்குக் கூட இவர்களை ரெக்கமண்ட் செய்யட்டும். அதைப் பற்றி எனக்கு கவலை கிடையாது. இது ஒரு தேவையில்லாத பிரச்சினை. அந்தப் படத்தின் கதையோ அதில் இருக்கக்கூடிய கற்பனையோ என்னைப் பொறுத்த வரைக்கும் தமிழ்நாட்டில் ஒரு தேவையில்லாத பிரச்சினை தான்.
இன்றைக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. தெரு நாய் பிரச்சனை, சாலை பிரச்சனை, குப்பை பிரச்சனை என பல பிரச்சனைகள் இருக்கின்றன.எந்தப் படத்தையும் தடை செய்ய வேண்டாம். மக்களுக்கு நன்றாகத் தெரியும், எது உண்மை என்பது, எது பொய் என்பது. இதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயமே கிடையாது. படம் பார்க்கிறவர்கள் பார்ப்பார்கள். ‘
ஒரு எண்டர்டெயின்மென்ட், ஒரு பொழுதுபோக்கு அவ்வளவுதான். அதற்கு மேல் எந்த ஒரு சீரியஸும் இந்த இரண்டு படத்திற்கும் கொடுக்கத் தேவையில்லை. நான் இரண்டு படங்களையும் பார்ப்பதாக இல்லை.” என தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை பராசக்தி பட நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன் இருவரும் எல்.முருகன் இல்லத்தில் பிரதமர் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் பங்கேற்றதை குறிப்பிட்டு மாணிக்கம் தாகூர் எம்பி, “சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு. ஆனால் ஜனநாயகனுக்கு தடை விதிக்கப்பட்டது” என்று பதிவிட்டிருந்தார்.
