காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற கூட்டணி முத்திரை கிடைக்கும். அப்போதுதான் திமுக மதச்சார்பற்ற கூட்டணி என்று கூறிக்கொள்ள முடியும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு பிரிவினர் ஆட்சியில் பங்கு என்ற வாதங்களை முன்வைத்து பொதுவெளியில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சியினரிடையே தொடர்ச்சியாக குழப்பம் நிலவுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் ராகுல் காந்தியை கனிமொழி எம்பி சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில் கூட்டணியில் குழப்பம் நீடிப்பதற்கும், மனக்கசப்பு ஏற்படுவதற்கு காரணம் திமுக தான் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் எம்பி,”திமுக-காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருந்தால் தான் இரண்டு கட்சிகளுமே வெற்றி பெற முடியும் என்பது எனது கருத்து. இரண்டு மாதங்களாக காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பேசி வருவதற்கும், குழப்பமான நிலை நீடிப்பதற்கும் திமுக கூட்டணி பேச்சுவார்தை குழு அமைக்காதது தான் காரணம்.
திமுக-காங்கிரஸ் இடையே இப்போது உள்ள மனக்கசப்புக்கு திமுகவே காரணம். கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்திருந்தால் இது போன்ற சர்ச்சை கருத்துக்கள் ஒருபோதும் வந்திருக்காது. இனியும் தாமதிக்காமல் பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அமைக்க வேண்டும். இல்லை என்றால் இந்த மனக்கசப்பு மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.
அதே சமயம், ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பத்து நாட்களுக்கு மேலாகியுள்ளது. ஆனால் கூட்டணிக்கு திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்காதது எதற்காக என்பது தெரியவில்லை. எனவே திமுக உடனடியாக முடிவெடுக்க வேண்டும். திமுக குழு அமைத்து பேசிவிட்டால் இந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
1967-க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. தனித்து நிற்கக்கூடிய பலம் இல்லை. அதே வேளையில் நாங்கள் இருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணியாக இருந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற கூட்டணி முத்திரை கிடைக்கும். அப்போதுதான் திமுக மதச்சார்பற்ற கூட்டணி என்று கூறிக்கொள்ள முடியும். எங்களை கூட்டலாகப் பார்க்கக் கூடாது; பெருக்கலாகப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஒருவேளை அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்தால், அது அதிமுக ஆட்சியாக இருக்காது; பாஜக ஆட்சியாகத்தான் இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
