கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற தர்மஸ்தலாவில் (Dharmasthala) நேத்ரா ஆற்றங்கரையில் தோண்டப்பட்ட புதைகுழிகளில் மனித எலும்பு கூடுகள் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் 8 இடங்களில் தோண்டும் பணி நடைபெற உள்ளது.
தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக திடுக்கிடும் புகார்கள் எழுந்தன. தர்மஸ்தலாவில் தூய்மை பணியாளராக பணியாற்றியவர், எலும்பு கூடுகளை தோண்டி எடுத்து மங்களூர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்த குழு நடத்திய விசாரணையின் போது, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த தூய்மை பணியாளர் மொத்தம் 33 இடங்களில் பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக அடையாளம் காட்டினார்.
இதனடிப்படையில் அந்த இடங்களை தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதலில் சில இடங்களில் பான் கார்டு உள்ளிட்ட பொருட்கள்தான் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து மேலும் சில இடங்களில் தோண்டப்பட்ட போது மனித எலும்பு கூடுகள் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றும் 8 இடங்களில் தோண்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தர்மஸ்தலாவில் புதைகுழிகளில் மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.